உக்ரைன் போர்; தோற்றால் என்னை தூக்கிலிடுவார்கள்! - புதின் அச்சம் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்
செய்தியாளர் : மீரா
உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அண்டை நாடான ரஷ்யா கடந்த 2022- ஆம் ஆண்டு தாக்குதலைத் தொடங்கிய நிலையில், 4 ஆண்டுகளைக் கடந்தும் போர் நீடித்து வருகிறது. இந்நிலையில் டொன்பாஸ் பிராந்தியத்தை முழுமையாக ஆக்கிரமிப்பது உள்ளிட்ட தனது உச்சபட்ச நோக்கத்தை அடையும் முன்பே உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது, இறுதியில் தனது ஆட்சி கவிழ்ப்புக்கு வழிவகுக்கக்கூடும் என்று ரஷ்யத் தலைவர் விளாடிமிர் புதின் அஞ்சுவதாக 'தி எகனாமிஸ்ட்' பத்திரிகை தெரிவித்துள்ளது.
டொன்பாஸ் (Donbas அல்லது Donbass) என்பது ரஷ்யா-உக்ரைன் எல்லையில் அமைந்துள்ள ஒரு வரலாற்று, கலாச்சார மற்றும் பொருளாதாரப் பகுதியாகும்; இது பெரும்பாலும் உக்ரைனுக்குள் அமைந்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் போரின் விளைவாக, டொன்பாஸ் பகுதியின் பெரும்பகுதி ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளது; அக்டோபர் 2025 நிலவரப்படி, இப்பகுதியின் சுமார் 70 சதவீதத்தை ரஷ்ய ஆயுதப் படைகள் கட்டுப்படுத்துகின்றன.
இந்த பிராந்தியத்தை முழுமையாக கட்டுபடுத்துவதை ரஷ்ய அதிபர் புதினின் நோக்கமாகும் . தனது உச்சபட்ச இலக்குகளை அடையாமல் போரை முடிவுக்குக் கொண்டுவருவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விவாதித்தபோது, ஒரு கட்டத்தில் புதின், போரில் தோற்றால் அவர்கள் என்னைத் தூக்கிலிடுவார்கள் என்று கூறியதாக அச்செய்தி அறிக்கை கூறுகிறது.
தன்னைத் தூக்கிலிட்டு விடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாகவே உக்ரைன் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்துவதன் மூலமாகவோ அல்லது போரை உக்ரைனுக்கு அப்பால் விரிவுபடுத்துவதன் மூலமாகவோ, புதின் பதற்றத்தை அதிகரிக்கத் தீர்மானித்திருப்பதாக அச்செய்தி அறிக்கை கூறுகிறது.
போருக்குப் பேச்சுவார்த்தை மூலம் ஒரு முடிவைக் கொண்டுவருவது பலவீனத்தின் அடையாளமாகக் கருதப்படும் என்றும், ஒரு பலவீனமான தலைவரால் ரஷ்யாவில் நீடிக்க முடியாது என்றும் புதின் நம்புவதாக ரஷ்ய உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதினுக்கு வேறு நல்ல வழிகள் எதுவும் இல்லாத நிலையில் அவர் இருக்கிறார் என்றும் 4 ஆண்டுகளுக்கும் மேலாகப் போரைத் தொடர்ந்த பிறகு, வெற்றி அல்லது தனிப்பட்ட தோல்வி இல்லாமல் அவரால் ஒரு மாற்று வழியைக் கண்டுபிடிக்க முடியாது என்றும் அச்செய்தி அறிக்கை கூறுகிறது.
எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான உக்ரைனின் தொலைதூரத் தாக்குதல்கள், பெருகிவரும் நிதி நெருக்கடி, தேக்கமடைந்த பொருளாதாரம், அதிகரித்து வரும் பொது அதிருப்தி மற்றும் ரஷ்யாவின் உயர் தலைவர்கள் மத்தியில் வளர்ந்து வரும் மனக்கசப்பு போன்ற பெருகிவரும் சவால்களால் போரைத் தொடர்வது புதினுக்கும் மேலும் சிக்கலாகியுள்ளது.
போரினால் ரஷ்யாவின் பொருளாதாரம், சர்வதேச வர்த்தகம் மற்றும் ராணுவ பலம் ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் ரஷ்ய தலைவர்களிடையே அதிருப்தி அதிகரித்துள்ளது. மன்னன் ஆடைகளின்றி நிற்கிறான் என்ற உணர்வு ரஷ்ய அதிகாரிகளிடையே மேலோங்கி வருவதாகக் ரஷ்யாவின் உயர்மட்டத் தரப்பைச் சேர்ந்த ஒருவர் 'தி எகனாமிஸ்ட்' (The Economist) இதழிடம் கூறியுள்ளார்.
போரை மேலும் தொடர்வது ரஷ்யாவிற்குப் பொருளாதார ரீதியாகப் பின்னடைவு என்ற போதிலும், பலவீனத்தைக் காட்டக் கூடாது என்ற மனநிலையிலேயே புதின் போரை தொடர்கிறார் என்று கூறப்படுகிறது.

