ரஷ்யா - உக்ரைன் உச்சக்கட்ட பதற்றம்.. எரிபொருள் தட்டுப்பாட்டை ஒப்புக்கொண்ட புதின்!!
2022-ஆம் ஆண்டு தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் போர், தற்போது ஐந்தாவது ஆண்டை எட்டியுள்ளது. போர் தொடங்கியதில் இருந்து இரு நாடுகளும் தொடர்ந்து ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் பிற ஆயுதங்களைப் பயன்படுத்தி பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஆரம்பத்தில் எல்லைப் பகுதிகள் மட்டுமே நடைபெற்ற தாக்குதல்கள், தற்போது புதிய கட்டத்தை எட்டியுள்ளன. ரஷ்யா உக்ரைனின் நகரங்கள், மின்நிலையங்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனும் நீண்ட தூரம் பயணிக்கும் ட்ரோன்கள் மூலம் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், எரிபொருள் கிடங்குகள் மற்றும் ராணுவத் தளங்களை குறிவைத்து தாக்கி வருகிறது.
இந்த நிலையில், நேற்று இரவு, ரஷியாவின் கிராஸ்னோடார் (Krasnodar) மற்றும் யாரோஸ்லாவ்ல் (Yaroslavl) பகுதிகளில் உள்ள இரண்டு முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. கிராஸ்னோடாரில் உள்ள ஸ்லாவ்யான்ஸ்க்-நா-குபானி (Slavyansk-na-Kubani) சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்தார். ஆண்டுக்கு சுமார் 40 லட்சம் டன் கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் இந்த நிலையம், ரஷியாவின் கருங்கடல் துறைமுகங்கள் வழியாக ஏற்றுமதி செய்யப்படும் எரிபொருட்களின் முக்கிய மையமாகும்.
யாரோஸ்லாவ்ல் பகுதியில் உள்ள மற்றொரு சுத்திகரிப்பு நிலையமும் தாக்கப்பட்டதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். "ரஷியாவின் ராணுவத்திற்கு சக்தி அளிக்கும் வளங்களையே நாங்கள் குறிவைக்கிறோம். ஒவ்வொரு தாக்குதலும் அமைதியை நோக்கிய ஒரு படி" என்று அவர் தனது டெலிகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், இந்தத் தாக்குதல்களின் தாக்கம் தற்போது ரஷியாவின் உள்நாட்டிலேயே எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. பல பகுதிகளில் பெட்ரோல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன. சில மாகாணங்களில் வாகனம் ஒன்றுக்கு 50 லிட்டர் மட்டுமே எரிபொருள் வழங்கும் அளவுக்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. உள்நாட்டு தேவையை சமாளிக்க எரிபொருள் ஏற்றுமதியையும் ரஷியா மறுபரிசீலனை செய்து வருகிறது.
இந்த சூழலில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் முதன்முறையாக, நாட்டில் "குறிப்பிட்ட அளவு எரிபொருள் தட்டுப்பாடு" ஏற்பட்டிருப்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். இருப்பினும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகக் கூறிய அவர், சேதமடைந்த சுத்திகரிப்பு நிலையங்கள் விரைவாக சீரமைக்கப்படும், எரிபொருள் உற்பத்தி அதிகரிக்கப்படும், தேவையானால் கூடுதல் எரிபொருள் இறக்குமதி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் எண்ணெய் நிலையங்களின் பாதுகாப்பை பலப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியுள்ளார்.
அதே நேரத்தில், இந்த தாக்குதல்கள் ரஷியாவின் ராணுவ நடவடிக்கையை எந்த வகையிலும் நிறுத்தாது என்றும் புதின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
போர்க்களத்தில் நேரடியாக மோதுவதைத் தாண்டி, எதிரியின் பொருளாதாரம் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகளை முடக்குவது என்ற புதிய உத்தியை உக்ரைன் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இந்தத் தாக்குதல்கள் தொடருமானால், ரஷியாவின் எரிபொருள் விநியோகம், பொருளாதாரம் மற்றும் போர் திறன் மீது மேலும் அழுத்தம் அதிகரிக்கலாம் என சர்வதேச ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

