அம்ரித்பால் சிங்,அவதார் சிங் கண்டா
அம்ரித்பால் சிங்,அவதார் சிங் கண்டா ani

அம்ரித்பால் சிங் தலைமறைவின்போது உதவிய நெருங்கிய கூட்டாளி: இங்கிலாந்தில் மர்ம மரணம்?

பஞ்சாப்பைச் சேர்ந்த காலிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த அம்ரித்பால் சிங்கின் நெருங்கிய கூட்டாளி இங்கிலாந்தில் மர்ம மரணம் அடைந்திருப்பதாகச் செய்தி வெளியாகி உள்ளது.

பஞ்சாப் அமிர்தசரஸைச் சேர்ந்த அம்ரித்பால் சிங், 'வாரிஸ் பஞ்சாப் தே' என்கிற காலிஸ்தான் ஆதரவு அமைப்பின் தலைவர் என அறியப்படுகிறார். இந்த அமைப்பு, பஞ்சாப்பில் உள்ள அஜ்னாலா காவல்நிலையத்தை முற்றுகையிட்டு, துப்பாக்கிகள் மற்றும் வாள்களை ஏந்திப் போராட்டம் நடத்தியது, பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து, பஞ்சாப்பில் தனி நாடு முழக்கமும் அதிகரித்தது.

amritpal singh
amritpal singhfile image

இதில் தலைமறைவான, அம்ரித்பால் சிங்கை கைது செய்ய பஞ்சாப் காவல் துறை தீவிரம் காட்டியது. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பின்பு கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி, மோகா மாவட்டம் ரோடே கிராமத்தில் உள்ள குருத்வாராவில் அவரே சரணடைந்தார். அப்போது, அம்ரித் பால் சிங்கை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அம்ரித்பால் சிங்கை அசாம் மாநிலத்தில் உள்ள திப்ருகார் சிறைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அவருடன், மேலும் 9 காலிஸ்தான் ஆதரவாளர்கள் அசாம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், அம்ரித்பால் சிங்கின் நெருங்கிய கூட்டாளியான அவதார் சிங் கண்டா என்பவர் மர்ம மரணம் அடைந்திருப்பதாகச் செய்தி வெளியாகி உள்ளது. அவர், கடந்த 12ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக பர்மிங்காம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் எனவும், அவர் ரத்த புற்றுநோயால் அவதிப்பட்டு வந்ததாகவும் சில தகவல்கள் கூறுகின்றன.

அதேநேரத்தில், அவருடைய மரணத்திற்கான உண்மையான காரணம் இதுவரை வெளியாகவில்லை. அதேநேரத்தில், அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டு இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

ஒரு மாதத்துக்கும் மேலாக தலைமறைவாக இருந்த அம்ரித்பால் சிங்கிற்கு உதவி செய்தவரே இந்த அவதார் சிங் கண்டாதான் எனச் சொல்லப்படுகிறது. இவர், இங்கிலாந்து நாட்டை அடிப்படையாகக் கொண்டு செயல்படக்கூடிய காலிஸ்தான் விடுதலைப் படையின் தலைவர் எனக் கூறப்படுகிறது. மேலும், காலிஸ்தானி பிரிவினைவாத அமைப்பின் முக்கிய நபராகவும் அறியப்படுகிறார். கடந்த மார்ச் 19ஆம் தேதி லண்டனில் தூதரகத்திற்கு வெளியே நடந்த போராட்டத்தின்போது, இந்திய தேசியக் கொடியை அவமதிப்பு செய்த போராட்டத்திற்கு தலைமை தாங்கியவரே அவதார் சிங்தான் எனச் சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com