
அமெரிக்காவின் நியூயார்க் நகரம் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக அமெரிக்காவின் நியூயார்க்கில் கனமழை பொழிந்தது. இதனால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. பலத்த காற்று வீசியதால் நியூயார்க் மற்றும் நியூ ஜெர்ஸி பகுதியில் மரங்கள் சாய்ந்தன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனிடையே, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர். ஒரு மணி நேரத்திற்கு 6 அங்குலம் தண்ணீர் தேங்குமளவிற்கு மழை பெய்ததாகவும், அதனை சமாளிக்கும் வகையில் நியூயார்க்கின் உட்கட்டமைப்பு இல்லை எனவும் நியூயார்க் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் வர்த்தக தடைகளை விமர்சித்து வெளியிடப்பட்ட விளம்பரம் தொடர்பாக, கனடா பிரதமர் மார்க் கார்னி அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் மன்னிப்பு கோரினார். அந்த விளம்பரத்தில் முன்னாள் அதிபர் ரீகனின் பேச்சுகள் இடம்பெற்றிருந்தன.
அந்த விளம்பரம் தவறானது என்றும் ரீகனின் நிலைப்பாட்டிற்கு நேர் எதிரானது என்றும் எதிர்ப்பு தெரிவித்த ட்ரம்ப், கனடாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தையை நிறுத்துவதாக அறிவித்தார். இந்நிலையில்தான், "அந்த விளம்பரம் தவறானது. அதற்காக நான் ட்ரம்பிடம் மன்னிப்பு கேட்டேன்" என்று கார்னி கூறியுள்ளார்.
பிஜி நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், கால் டாக்ஸி ஓட்டி அதில் சம்பாதிக்கும் பணத்தை இந்திய மாணவிகளுக்கு அனுப்பி வருகிறார். இந்தியாவைச் சேர்ந்த தொழிலபதிபர் நவ் ஷா, பிஜி நாட்டில் டாக்ஸியில் சென்றபோது அதன் ஓட்டுநரிடம் உரையாடியுள்ளார்.
அப்போது 86 வயதான அந்த ஓட்டுநர், தான் ஒரு செய்தித்தாள் நிறுவனம், 13 நகைக்கடைகள் உள்ளிட்டவற்றை நடத்தி வருவதாகவும், ஆண்டுக்கு 175 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். டாக்ஸி ஓட்டுவதன் மூலம் ஈட்டும் வருமானத்தைக் கொண்டு, வருடந்தோறும் 24 இந்திய மாணவிகளுக்கு உதவுவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து நவ் ஷா வெளியிட்ட பதிவு, சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.
சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஒய்வு பெறுவதாக, நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் அறிவித்துள்ளார். தனது முடிவு, டி20 உலகக் கோப்பை தொடருக்கு தயாராகவுள்ள நியூசிலாந்து அணிக்கு, தெளிவை அளிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
35 வயதான வில்லியம்சன், தனது நாட்டிற்காக 95 டி20 போட்டிகளில் விளையாடி 2,575 ரன்களை குவித்துள்ளார். டி20 போட்டிகளில், நியூசிலாந்திற்காக அதிக ரன்களை குவித்தவர் வில்லியம்சன் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது தலைமையில் நியூசிலாந்து அணி, டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிக்கு இரண்டு முறையும், இறுதிப்போட்டிக்கு ஒருமுறையும் முன்னேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கரீபிய கடல் பகுதியில் அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தியதில் 3 பேர் உயிரிழந்தனர். இத்தகவலை அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார். தென் அமெரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குள் போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக குற்றஞ்சாட்டும் டிரம்ப், அரசு படகில் வரும் கடத்தல்காரர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இது வரை 15 தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் 64 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தென் அமெரிக்க நாடான வெனிசுலாவை தாக்க அமெரிக்கா தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் அருகே ஓடும் ரயிலில் 10 பேர் கத்தியால் குத்தப்பட்டனர். குத்தியதாக சந்தேகப்படும் இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிகழ்வின் பின்னணி குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். இதில் சிலர் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். கத்திக்குத்து தாக்குதலையடுத்து தலைநகர் லண்டனில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது
இலங்கையின் முல்லைத்தீவு பகுதியில், போதிய தண்ணீர் இல்லாததால், 300 ஏக்கர் பரப்பளவிலான விவசாயம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். புதுக்குடியிருப்பு கிழக்கு கமக்கார அமைப்பின்கீழ் உள்ள சித்தாறு, சிவசாமி, வீரசிங்கம் ஆகிய மூன்று அணைக்கட்டுகள், 85 மில்லியன் நிதியுதவியுடன் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், இப்பணிகள் நீண்ட நாட்களாக முடிவுறாமல் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கு விவசாயிகள் கடும் அதிருப்தி தெரிவித்ததால், உலக வங்கி குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
நைஜீரியாவில் கிறிஸ்தவர்கள் கொல்லப்படுவது தொடர்ந்தால் ராணுவ நடவடிக்கைக்கு வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். தனது ட்ரூத் சமூகத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர் கொலைகள் தொடர்ந்தால் முதலில் நைஜீரியாவிற்கான உதவிகள் அனைத்தும் நிறுத்தப்படும் என்றும் ராணுவ நடவடிக்கைக்குகூட வாய்ப்பிருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ராணுவ நடவடிக்கைக்கு தயாராக இருக்குமாறு தங்கள் நாட்டு போர்த்துறையை அறிவுறுத்தியுள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஆனால் கிறிஸ்தவர்கள் குறிவைத்து கொல்லப்படுகின்றனர் என்ற ட்ரம்ப்பின் குற்றச்சாட்டை நைஜீரியா மறுத்துள்ளது.
அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளைத் திருடுவதில் இந்தியர்களே பெரும் பங்கு வகிப்பதாக அமெரிக்க அரசு சமீபத்திய விளம்பர வீடியோவில் மறைமுகமாக விமர்சித்துள்ளது. ஹெச்- 1பி விசா தவறாகப் பயன்படுத்தப்படுவதை மையமாகக்கொண்ட அந்த வீடியோவில், விசா பெறுபவர்களில் 72 சதவீதம் இந்தியர்களே எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டுப் பணியாளர்களை நியமித்து, இளம் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பல அமெரிக்கர்களின் கனவு திருடப்பட்டுள்ளதாகவும் கூறி, ட்ரம்ப் நிர்வாகம் இந்த விளம்பர வீடியோவை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் வேலைவாய்ப்பு மற்றும் குடியேற்ற கொள்கைகளில், உள்நாட்டு பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் ட்ரம்ப் நிர்வாகத்தின், 'அமெரிக்கா ஃபர்ஸ்ட்' என்ற நிலைப்பாட்டை குறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த விளம்பரத்தின் இறுதியில், 'அமெரிக்கர்களுக்கான அமெரிக்க கனவை மீட்டெடுப்போம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.