
நிலவில் குறிப்பிட்ட பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட மண் மட்டும் ஒட்டும் தன்மை கொண்டுள்ள நிலையில், அதற்கான காரணத்தை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பூமிக்கு எதிர்ப்பகுதியில் உள்ள நிலவுப்பகுதியில் இம்மண் எடுக்கப்பட்டதாகவும் எனவே வேறு விண் கற்கள் அப்பகுதியில் தாக்கியதால் இவ்வாறு இருக்கக்கூடும் என்றும் சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மேலும், பூமியை நோக்கிய பகுதியில் இருக்கும் காந்தப்புல பாதுகாப்பு அதன் எதிர்ப்புறத்தில் இல்லை என்றும் அவர்கள் விளக்கியுள்ளனர். கடந்தாண்டு அனுப்பப்பட்ட சாங் - 6 என்ற நிலவு ஆய்வுத் திட்ட விண்கலம் மூலம் இந்த மண் எடுத்து வரப்பட்டு சோதிக்கப்பட்டு வருகிறது. இது விண்வெளி குறித்த எதிர்கால ஆய்வுகளில் பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது
அமெரிக்காவில் இரு சகோதரர்கள் தங்கள் தாய் இறந்தபின் வீட்டை சுத்தம் செய்த போது கிடைத்த ஒரு புத்தகம் அவர்களுக்கு 81 கோடி ரூபாயை ஈட்டித்தந்துள்ளது. 1939ஆம் ஆண்டு முதன்முதலில் வெளியான சூப்பர்மேன் காமிக்ஸ் புத்தகம் என்பதால் அதற்கு அவ்வளவு விலை கிடைத்துள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸில் ஒரு ஏல நிறுவனம் மூலம் புத்தகம் விற்கப்பட்டுள்ளது. மேலும், இதுதான் உலகில் அதிக விலைக்கு விற்கப்பட்ட காமிக்ஸ் புத்தகம் என்ற பெருமையையும் பெற்றது, புகழ்பெற்ற சூப்பர்மேன் கதாபாத்திரம் காமிக்ஸ் புத்தகமாக அறிமுகமானாலும் பின்னர் திரைப்படங்களிலும் இடம் பெற்று உலகப் புகழ் பெற்றது
அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட 3 வயது சிறுவனுக்கு பிரிட்டன் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து அவனது உயிரை காப்பாற்றியுள்ளனர். ஹன்டர் சிண்ட்ரோம் எனப்படும் நோயால் பாதிக்கப்படும் சிறுவர்களுக்கு மன மற்றும் உடல் ரீதியான வளர்ச்சி மிகவும் குறைவாக இருக்கும். இந்நோய் பாதித்தவர்கள் 20 வயதுக்கு மேல் உயிருடன் வாழ முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் ஆலிவர் சூ என்ற 3 வயது சிறுவன் இந்நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவர்கள் மரபணு சிகிச்சையை மேற்கொண்டு நோயை குணப்படுத்தியுள்னர். ஹன்டர் சின்ட்ரோம் பாதிப்புக்குள்ளானவர் குணமானது உலகில் இதுவே முதல்முறை.
கனடாவில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய குடியுரிமை திருத்தச்சட்டம் அங்கு வசிக்கும் இந்திய மக்களுக்கும் பலன் அளிக்கும் வகையில் இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போதுள்ள சட்டப்படி வெளிநாட்டில் வசிக்கும் கனடா குடிமகனுக்கு பிறக்கும் பிள்ளைகளுக்கு தானாகவே கனடா குடியுரிமை பெறும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதனால் கனடா குடியுரிமை பெற்ற ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த கனடா நீதிமன்றம் அரசின் சட்டத்திற்கு எதிராக தீர்ப்பளித்தது. இந்நிலையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு கனடா நாடாளுமன்றம் சட்டம் இயற்றியுள்ளது. மன்னர் ஒப்பதலுடன் இது சட்டமாக மாறும்.
மலேசியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க, அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. இணையவழி மோசடிகள், பாலியல் துஷ்பிரயேகங்கள் போன்ற அச்சுறுத்தல்களில் இருந்து சிறாரை பாதுகாக்கும் விதமாக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது. இந்தத் தடை 2026ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்றும், சமூக ஊடகங்களை பயன்படுத்துவர்களின் வயதை உறுதி செய்ய, மின்னணு அடையாள சரிபார்ப்பு முறைகள் மேற்கொள்ளவும், மலேசிய அரசு முடிவு செய்துள்ளது.
இலங்கையில் 2011ஆம் ஆண்டு எம்பிலிப்பிட்டிய பகுதியில் ஒருவர் ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்ட வழக்கில், பத்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை இரத்தினபுரி மாவட்ட எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. முல்லகஸ்யாய பகுதியில் நடைபெற்ற கொலையில் தொடர்புடைய மூன்று பெண்கள் உட்பட பத்து பேருக்கு நீதிமன்றம் ஒரே நாளில் தண்டனை வழங்கி வழக்கை நிறைவு செய்துள்ளது.
உலக ரட்சகர் என கிறிஸ்துவ மக்களால் போற்றப்படும் இயேசுபிரான் அவதரித்த நாளை கொண்டாட உலகம் தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஜெர்மனியில் உலகின் மிக உயரமான கிறிஸ்துமஸ் மரம் சமீபத்தில் ஒளிரவிடப்பட்டது. ஆயிரக்கணக்கான சிறிய ஊசியிலை மரங்களைக் கொண்டு ஒரு உலோகச் சட்டகத்தின் மீது பிரம்மாண்டமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்பு அருகே உள்ள சரணாலயத்தில் காவல்துறையினர் நடத்திய நான்கு நாள் சிறப்புச் சோதனையில், மூன்று பெரிய கஞ்சா தோட்டங்களைக் கண்டுபிடித்தனர். சுமார் 2 லட்சம் கஞ்சா செடிகள் மற்றும் 50 கிலோவுக்கும் அதிகமான உலர்ந்த கஞ்சா ஆகியவை கைப்பற்றப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் சட்டவிரோதமாகப் பயிரிடப்பட்டிருந்த இந்தக் கஞ்சா தோட்டங்களை முழுவதும் அழித்துவிட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் முதலீடு செய்யும் இந்திய நிறுவனங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முழுமையான வரி விலக்கு அளிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இது அந்நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. தேவைப்படும் மூலப்பொருட்கள், மற்றும் இயந்திரங்களை இறக்குமதி செய்வதை எளிதாக்கும் வகையில் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.