
உலகிலேயே அதிக கருவுறுதல் விகிதம் கொண்ட நாடுகள் பட்டியலில் ஆப்பிரிக்க நாடுகள் முதன்மை வகிப்பதாக மத்திய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி, நைஜர் நாடு அதிகபட்சமாக 6.64 என்ற மொத்த கருவுறுதல் விகிதத்தைக் கொண்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக அங்கோலா, காங்கோ , மாலி , பெனின், சாட், உகாண்டா, சோமாலியா, தெற்கு சூடான் உள்ளிட்ட நாடுகள் 5க்கும் மேற்பட்ட கருவுறுதல் விகிதத்தை கொண்டுள்ளது. இந்தியா இந்த பட்டியலில் 2.03 என்ற மொத்த கருவுறுதல் விகிதத்துடன் 101ஆவது இடத்தில் உள்ளது.
இத்தாலி தலைநகர் ரோமில், கோலோசியம் அருகே அமைந்துள்ள பழமையான டோர்ரே டெய் காண்டி கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில், கட்டுமானத் தொழிலாளி ஒருவர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டார். மேலும், மற்றொரு தொழிலாளி கடுமையாக காயமடைந்தார். 13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த வரலாற்றுக் கோபுரத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தபோது, திடீரென பகுதி அளவில் இடிபாடு ஏற்பட்டது. விபத்து நேரத்தில் இருந்த மூன்று தொழிலாளர்கள் உயிர்தப்பியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல நூற்றாண்டுகளுக்கு முன் நிலநடுக்கங்களில் மேல் தளங்கள் சேதமடைந்த இந்தக் கோபுரம் தற்போது சுமார் 29 மீட்டர் உயரத்தில் உள்ளது. இது ரோமின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.
சுவிட்சர்லாந்தின் சூரிச் விமான நிலையத்தில் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 767 ரக விமானம் தரையிறங்குவதற்கு முன் மீண்டும் மேலே பறந்தது. விமானத்தை இயக்கிய பைலட்டுகள், தரையிறங்கும் சூழ்நிலைகள் பாதுகாப்பாக இல்லை என மதித்து ‘கோ- அரவுண்ட்’ எனப்படும் பாதுகாப்பு நடைமுறையைத் தேர்ந்தெடுத்தனர். விமானம் ரன்வேயைத் தொட்டிருக்கலாம் அல்லது அதற்கருகில் வந்திருக்கலாம். ஆனால், வானிலை, பலத்த காற்று அல்லது ரன்வேயில் உள்ள தடங்கல்கள் போன்ற காரணங்களால் பைலட்டுகள் ஆபத்தைத் தவிர்க்க முடிவு செய்தனர். பின்னர் விமானம் வானில் சுற்றி, நிலைமை சரியான பிறகு பாதுகாப்பாக தரையிறங்கியது. இத்தகைய ‘கோ-அரவுண்ட்’ முடிவுகள் உலகளாவிய அளவில் வழக்கமான பாதுகாப்பு நடவடிக்கைகளாகக் கருதப்படுகின்றன.
அமெரிக்காவில் உள்ள ஒரு உணவகத்தில், பாத்திரம் கழுவும் வேலைக்காக சேர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கோலி என்பவர், தற்போது அதே உணவகத்தின் 250 கிளைகளை சொந்தமாக வாங்கி ஆச்சரியப்பட வைத்துள்ளார். கடந்த 2003ஆம் ஆண்டு சொற்ப வருமானத்தில், அந்நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த கோலி, சமையல்காரராகவும், பாத்திரவும் கழுவும் பணியும் செய்துவந்துள்ளார். வேலை செய்துகொண்டே நிதி மற்றும் சந்தைப்படுத்துதல் துறையில் பட்டம் பெற்ற பின்னர், தான் பணிபுரிந்த நிறுவனத்தில் முதலீடு செய்யத் தொடங்கிய அவர், தற்போது 250 கிளைகளை சொந்தமாக்கியுள்ளார்.
நைஜீரியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுத்து நிறுத்த தவறினால் ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள தயங்கமாட்டோம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். போகோ ஹராம் உள்ளிட்ட பயங்கரவாத குழுக்கள் நைஜீரியாவின் மத்தியப் பகுதியில் கொடூர தாக்குதல்களை நிகழ்த்தி வருகின்றன. அந்நாட்டில் நிலம் மற்றும் நீருக்கான மோதல் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் மத்தியில் தொடர்ந்து வருகிறது.
2020ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை 20ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இதில் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் கிறிஸ்தவர்கள் எனக் கூறப்பட்டாலும், இது அவர்களுக்கு எதிரான தாக்குதல் மட்டுமே அல்ல என்கின்றனர் ஆய்வாளர்கள். இத்தகைய தாக்குதல்களை தடுக்கத் தவறினால் நைஜீரியாவிற்கான உதவிகளை நிறுத்திவிட்டு ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ஆஃப்கானிஸ்தானின் இந்து குஷ் மலைப் பகுதியில், 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில், சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளனர். 320க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மசார்-இ-ஷெரீப் நகரத்தின் அருகே மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தால் ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபூல், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், ஈரானின் மஷ்ஹத் நகரம் வரையில் அதிர்வுகள் உணரப்பட்டன.
ஆப்பிரிக்க நாடான கென்யாவில் நிலச்சரிவில் இறந்தவர்கள் எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ளது. 25 பேர் குறித்த விவரங்கள் தெரியாத நிலையில் அவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் கிப்சும்பா முர்கோமன் தெரிவித்துள்ளார். கென்யாவில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்த நிலையில் செசோன்கச் பகுதியில் பெரிய அளவில் மண் சரிவு ஏற்பட்டு வீடுகள் புதைந்துள்ளன.
ரஷ்யாவின் கடற்படை வலிமையை அதிகரிக்கும் விதமாக, அதிசக்தி வாய்ந்த அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரே பெலூசோவ் அறிமுகப்படுத்தினார். நீருக்கடியில் செல்லும் நவீன ஆயுதங்கள், ரோபோ அமைப்புகளுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிகவும் ரகசியமான மற்றும் மேம்பட்ட ஆயுதங்களில் ஒன்றான போஸிடோன் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல், குண்டுகளை ஏந்திச் செல்லும் திறன் கொண்டதாகும்.
பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில், இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார். பாரீஸ் ஏ.டி. பி டென்னிஸ் போட்டிகள், பிரான்ஸில் நடைபெற்றன. இத்தொடரின் இறுதிப் போட்டியில், இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாம்சிம்-ஐ எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 6க்கு 4, 7க்கு 6 என்ற நேர் செட்டில், ஜானிக் சின்னர் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம், 24 வயதான ஜானிக் சின்னர், உலக தரவரிசையில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறினார்.