
நேபாளத்தில் கடந்த 2 மாதங்களாக அமைதி நீடித்து வந்தநிலையில் மீண்டும் ஜென் சி தலைமுறையினரின் போராட்டத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் ஆதரவாளர்களும், ஜென் ஸி அமைப்பினர்களும் நடத்திய பேரணியின் போது, இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து காவல் துறையினர் முறையாக நடக்கவில்லை என்று குற்றஞ்சாட்டி, ஜென் ஸி இளைஞர்கள் மீண்டும் போராட்டக்களத்தில் குதித்துள்ளனர். இந்தநிலையில் வருகிற மார்ச் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், ஜனநாயகத்தின் மீது இளைஞர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என இடைக்கால அரசின் பிரதமர் சுஷிலா கார்கி கேட்டுக்கொண்டுள்ளார்.
தென்னாப்ரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரில் ஜி20 நாடுகளின் மாநாடு நடைபெற உள்ள நிலையில் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணிகளில் ராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுமார் 40க்கு மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். கடன் நெருக்கடி, பருவநிலை மாற்ற பிரச்சினையில் அக்கறை செலுத்தாதது, ஏழை நாடுகளுக்கு நிதியுதவி நிறுத்தம், குடியேறிகளுக்கு எதிரான செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை எதிர்த்து பல்வேறு பிரிவினர் போராட்டம் நடத்த உள்ள நிலையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் இந்தியா சார்பில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதைனையடுத்து, இன்று பிரதமர் மோடி தென்னாப்பிரிக்கா செல்கிறார்.
முன்னதாக, தென்னாப்ரிக்காவில் வெள்ளை இனத்தவருக்கு கொடுமைகள் இழைக்கப்படுவதாக கூறி இம்மாநாட்டை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புறக்கணித்துள்ளார்.
காஸாவின் கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியதில் 33 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போர் தொடங்கிய 2023ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை 69 ஆயிரம் பேர் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியர், தாஜ்மஹாலுக்கு வருகை புரிந்தார். தாஜ்மஹால் வந்த அவருடன், 40-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 126 சிறப்பு விருந்தினர்கள் கொண்ட ஒரு பெரிய குழுவும் உடனிருந்தது. ராஜஸ்தானின் உதய்பூரில் நடைபெறும் ஒரு இந்திய- அமெரிக்க ஜோடியின் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக டிரம்ப் ஜூனியர் இந்தியா வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவில் லாரிகள், டீசல் மற்றும் எல்என்ஜி எரிவாயுவுக்கு பதிலாக மின்சாரத்திற்கு மாறத் தொடங்கியுள்ளன. இதனால் உலகளவில் டீசல் மற்றும் எல்என்ஜி தேவை கணிசமாக குறையும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. உலகிலேயே அமெரிக்காவிற்கு அடுத்து சீனாவில்தான் லாரிகள் அதிகளவில் உள்ளன. சீனா தவிர இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் மின்சார வாகன பயன்பாடு மெல்ல அதிகரிக்கும் நிலையில் உலகளவில் பெட்ரோலிய சந்தை மிகப்பெரும் வீழ்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு மத்திய கிழக்கு நாடுகள் மாற்று வருவாய் ஆதாரங்களை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளன.
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு காரணமாக மக்கள் தங்கள் உடைமைகளுடன் வெளியேறி வருகின்றனர். மவுண்ட் செமேரு எரிமலை வெடித்து சிதறியதால் லுமாஜாங் மாவட்டத்தில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களை தேடி வெளியேறி வருகின்றனர். மேலும் எரிமலையில் மலையேற்றம் சென்ற 170 பேரை மீட்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.
ரஷ்ய அதிபர் புடின் முன் ஒரு ரோபோ தனது திறமைகளை வெளிப்படுத்தியது. ரஷ்யாவில் உள்ள ஸ்பெர்பேங்க் (SBERBANK) எனும் வங்கி, ஏஐ தொழில்நுட்பத்தில் இயங்கும் கிரீன் என்ற பெயர் கொண்ட ரோபோ ஒன்றை தயாரித்துள்ளது. அதன் செயல்பாடுகள் அதிபர் புடின் முன் விளக்கப்பட்டது. அப்போது புடினுடன் பேசிய ரோபோ, நடனமும் ஆடிக் காட்டியது. இதை புடின் புன்னகையுடன் கண்டு மகிழ்ந்தார். அதே நேரம் ரோபோவால் அதிபருக்கு ஆபத்து எதுவும் நேர்ந்துவிடக்கூடாது என்பதற்காக பாதுகாவலர்கள் உஷாராக இருந்தனர்.
20 கோடிக்கும் மேற்பட்ட இந்திய குழந்தைகளுக்கு முறையான கல்வி, ஊட்டசத்து கிடைப்பதில்லை என யுனிசெஃப் தெரிவித்துள்ளது. யுனிசெஃபின் 2025ஆம் ஆண்டின் உலக நாடுகளில் குழந்தைகள் என்ற தரவின்படி இந்தியாவில் 20 கோடியே 6 லட்சம் குழந்தைகள் கல்வி, சுகாதாரம், வீடு வசதி, ஊட்டசத்து, தூய்மையான குடிநீர் உள்ளிட்ட 6 அத்தியாவசிய தேவைகளில் ஒன்றில் குறைபாடுடன் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் மூன்று பகுதி அளவு குழந்தைகள் 2 அல்லது அதற்கும் அதிகமான அடிப்படை தேவைகள் கிடைக்காமல் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
தாய்லாந்தில் மிஸ் யுனிவர்ஸ் போட்டியின் போது மேடையில் தவறி விழுந்த ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த மாடல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாங்காக்கில் மிஸ் யுனிவர்ஸ் 2025 சர்வதேச அழகிப் போட்டிக்கான முன்னோட்டச் சுற்று நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியில் ராம்ப் வாக் செய்தபோது, மேடையின் விளிம்பில் கால் தவறி ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த மாடல் கேப்ரியல் ஹென்றி கீழே விழுந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.