
அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் சுடப்பட்ட நிலையில், ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரஹ்மானுல்லா லக்கன்வாய் என்பவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்காவுக்கு வர விண்ணப்பித்துள்ள ஆப்கானிஸ்தானியர்களை அனுமதிக்க வேண்டாம் என அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். மிக அதிக பாதுகாப்பு உள்ள பகுதியில் நடந்த இத்துப்பாக்கிச்சூடு அமெரிக்காவையே அதிரவைத்துள்ளது. இதையடுத்து, கூடுதலாக 500 தேசிய பாதுகாப்பு படையினர் வாஷிங்டனில் பணியமர்த்த ட்ரம்ப் நிர்வாகம் ஆணையிட்டுள்ளது. இதற்கிடையே சுடப்பட்ட 2 வீரர்களும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அமெரிக்காவில் அடுத்தாண்டு நடைபெற உள்ள ஜி20 மாநாட்டில் பங்கேற்க தென்னாப்ரிக்காவிற்கு அழைப்பு விடுக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னாப்ரிக்காவில் அண்மையில் முடிந்த ஜி20 மாநாட்டை அமெரிக்கா புறக்கணித்திருந்தது. இதனால் கடும் கோபமடைந்த தென்னாப்ரிக்கா தன்னிடம் இருந்த ஜி20 தலைமை பதவியை அமெரிக்காவிடம் முறைப்படி ஒப்படைக்கவில்லை. தென்னாப்ரிக்காவில் வெள்ளையினத்தவர் துன்புறுத்தப்படுவதாகவும் அதை தடுக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ட்ரம்ப் கூறி வருகிறார். ஜி20 அமைப்பில் இருக்க தகுதியில்லாத நாடு என்றும் தென்னாப்ரிக்காவை ட்ரம்ப் விமர்சித்திருந்தார். இந்நிலையில், அடுத்த மாநாட்டுக்கு அழைப்பு கிடையாது என கூறியிருப்பது மூலம் அமெரிக்கா, தென்னாப்ரிக்கா உறவு மேலும் சீர்கெட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நலமாக உள்ளதாக அடியலா சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவருமான இம்ரான் கான் சிறையில் இருந்துவரும் நிலையில் அவர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தானில் செய்தி பரவியுள்ளது. இதனால் அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கியுள்ள நிலையில் அந்நாட்டில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இம்ரான் கானை பார்க்க சிறை நிர்வாகம் அனுமதிக்கவில்லை என அவரது சகோதரிகளும் கவலை தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இம்ரான் கான் கொலையுண்டார் என்ற செய்தி அடிப்படையற்றது என்றும் அவர் முழு உடல் நலத்துடன் இருப்பதாகவும் சிறை நிர்வாகம் கூறியுள்ளது.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஊழல் தொடர்பான 3 வழக்குகளில் தலா 7 ஆண்டு தண்டனையை வங்கதேச உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. ஏற்கெனவே வங்கதேசத்தில் மனித உரிமைகள் மீறல் விவகாரத்தில் ஷேக் ஹசீனாவுக்கு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் மரண தண்டனை வழங்கியுள்ளது. மேலும், இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஹசீனாவை தங்கள் நாட்டுக்கு திருப்பியனுப்ப வங்கதேசம் 3 முறை கேட்டுக்கொண்டுள்ளது. எனினும் இதில் இந்தியா திட்டவட்டமான எந்த முடிவும் எடுக்கவில்லை.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினிய பாத்திரங்களில் காரீயக்கலப்பு இருக்கும் அபாயம் உள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. இந்தியாவிலிருந்து இறக்குமதியான சில நிறுவனங்களின் அலுமினிய, பித்தளை பாத்திரங்களை சோதித்ததில் காரீய அளவு அதிகமாக இருந்ததாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. தொடர்ந்து, காரீயம் உணவுடன் கலந்து உடலுக்குள் செல்லும் அபாயம் உள்ளதாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத் துறை தங்கள் நாட்டு மக்களை எச்சரித்துள்ளது. காரீயம் உடலில் கலப்பதால் வாந்தி, தலைசுற்றலில் இருந்து ஞாபக மறதி, எடைக்குறைவு வரை, பல விதமான பாதிப்புகள் ஏற்படும். எனவே, இந்தியாவிலிருந்து வரும் சமையல் பாத்திரங்களை கவனமுடன் வாங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய நகரங்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது இந்தோனியசியாவின் தலைநகரமான ஜகார்த்தா. ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 41 புள்ளி 9 மில்லியன் மக்கள் தொகையுடன் ஜகார்த்தா முதலிடமும், 36 புள்ளி 6 மில்லியன் மக்களுடன் வங்காளதேசத்தின் டாக்கா நகர் இரண்டாவது இடமும் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் ஜப்பானின் டோக்கியோ நகரம் 33.4 மில்லியன் மக்கள் தொகையுடன் மூன்றாவது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. மேலும் இரண்டாயிரத்து 50ஆம் ஆண்டிற்குள் உலகின் மிகப்பெரிய நகரமாக டாக்கா மாறும் எனவும் ஐ.நா கணித்துள்ளது.
இந்திய அரசமைப்புச் சட்ட தினத்தை முன்னிட்டு, அரசமைப்புச் சட்டத்தின் சிற்பியான டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் சிலை பிரான்ஸின் பாரீஸ் நகரில் உள்ள யுனெஸ்கோ (UNESCO) தலைமையகத்தில் திறக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இந்த நிகழ்வின் படங்களை எக்ஸ் சமூக ஊடகத்தில் பகிர்ந்து, இது ஒரு பெருமைக்குரிய தருணம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தியாவின் அரசமைப்பை வடிவமைத்ததில் அம்பேத்கரின் முக்கியப் பங்கிற்கு அஞ்சலி என்றும், அவரது லட்சியங்கள் மில்லியன் கணக்கான மக்களுக்கு தொடர்ந்து உத்வேகம் அளித்து வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஆப்பிள் நிறுவனம் உலகின் மிகப்பெரிய கைபேசி தயாரிப்பாளர்கள் என்ற இடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இதன் மூலம் சாம்சங்கின் இடத்தை ஆப்பிள் பிடிக்க இருக்கிறது. இரண்டாயிரத்து 11ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தச் சாதனையை ஆப்பிள் செய்யவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிளின் கிடுகிடு விற்பனை உயர்வுக்கு சமீபத்திய ஐஃபோன் 17 வரிசை முக்கியக் காரணமாகும். இரண்டாயிரத்து 25ஆம் ஆண்டில் ஆப்பிளின் ஏற்றுமதி 10 சதவீதமாகவும் சாம்சங்கின் ஏற்றுமதி 4.6 சதவீதமாகவும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. இரண்டாயிரத்து 25 முடிவுக்குள் ஸ்மார்ட்ஃபோன்களின் சந்தை 3 புள்ளி 3 சதவீதம் அதிகரிக்க இருக்கிறது. இதில் ஆப்பிள் கைபேசிகளின் பங்கு மட்டும் 19 புள்ளி 4 சதவீதம் ஆகும். இரண்டாயிரத்து 26இல் விலை குறைவான ஐஃபோன் சந்தைக்கு வர இருப்பது பயனர்களுக்கு ஒரு மகிழ்சியான செய்தியாகும்.
இலங்கையில் கடந்த 11 நாட்களாக பெய்து வரும் மழையால் 31 பேர் உயிரிழந்துள்ளனர். 4 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பதுளை மாவட்டத்தில் நிலச்சரிவுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்த நிலையில், 9 பேர் காணாமல் போயுள்ளனர். நேற்று 6 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பதுளை மாவட்டம் முழுவதும் பல இடங்களில் நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளன. காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளில் மீட்புக் குழுக்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.