பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை கொடுத்த துப்புரவாளர்
பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை கொடுத்த துப்புரவாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாகிஸ்தானில் டாக்டர்கள் போராட்டம் நடைபெறுகிறது.
பாகிஸ்தானில் உள்ள தெற்கு பஞ்சாப் மாவட்டத்தின் பஹாவல்பூரில் குவைத் இ-அஸாம் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் பெண் மருத்துவர் ஒருவர் நேற்று, அவரச சிகிச்சைப் பிரிவு அறையில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த துப்புரவு பணியாளர் ரஹிம்யர் கான், அப்பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அத்துடன் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார். அவரிடமிருந்து தப்பிக்க போராடிய டாக்டரின் அலறல் சத்தம் கேட்டு, மருத்துவமனையில் காவல்பணியாளர்கள் ஓடிவந்துள்ளனர். அவர்கள் வந்து தகாத முறையில் நடந்த துப்புரவு பணியாளரை பிடித்து கட்டிவைத்துள்ளனர். பின்னர் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில் பெண் டாக்டருக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை சம்பவத்தை கண்டித்து பாகிஸ்தானின் பல பகுதிகளில் டாக்டர்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. லாகூர், முல்டான், பஹாவல்பூர், ஃபைசலாபாத், ரவல்பிண்டி, சர்கோதா, குஜ்ரன்வாலா மற்றும் பல நகரங்களில் நடைபெற்ற இந்தப் போராட்டங்களில் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் பங்கேற்றனர். இதனால் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியாமல், நோயாளிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். போராட்டம் நடத்தும் டாக்டர்கள் இரண்டு முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
ஒன்று துப்புரவு பணியாளர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்து வழக்கை, தீவிரமாக விசாரிக்க வேண்டும். இரண்டாவது மருத்துவர்கள் பாதுகாப்பு சட்டத்தை வரும் நடக்கவுள்ள பஞ்சாப் சட்டசபையில் நிறைவேற்ற வேண்டும். இந்தச் சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ள பாகிஸ்தான் அரசு, மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மற்றும் கல்லூரி முதல்வரை இடைநீக்கம் செய்துள்ளது. அத்துடன் இதுதொடர்பாக விசாரிக்க மூத்த பேராசிரியர்கள் 3 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது.