அமேசான் காடுகள் அழிப்பு.. குரல் எழுப்பியவர்கள் மர்ம மரணம்.. ஆய்வு நிறுவனம் குற்றச்சாட்டு!
அமேசான் காடுகள் அழிப்புக்கு எதிராகக் குரல் எழுப்பிய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர், மர்மமான முறையில் கொல்லப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
'பூமியின் நுரையீரல்' என்று அழைக்கப்படும், தென் அமெரிக்க கண்டத்தின் சுமார் 70 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவில் அமேசான் காடுகள் பரந்து விரிந்து காணப்படுகிறது. அதாவது, உலக நாடுகளில் உள்ள மொத்த காடுகளையும் ஒன்று சேர்த்தாலும், அதைவிட அமேசான் காடுகளின் பரப்பளவு மிகவும் அதிகம். பிரேசில், பெரு, பொலிவியா, கொலம்பியா, வெனிசூலா, கயானா, ஈகுவடார், சுரினாம், பிரெஞ்ச் கயானா ஆகிய 9 நாடுகளில் இந்த அமேசான் காடுகள் பரந்து கிடக்கிறது. 10 ஆயிரத்திற்கும் அதிகமான உயிரினங்களுக்கும், பழங்குடி இனத்தவர்களுக்கும் புகலிடமாக உள்ளது.
மேலும், இங்குள்ள மொத்தம் 39 ஆயிரம் கோடி மரங்கள் மூலமாக, ஆண்டுக்கு 60 ஆயிரம் கோடி டன் ஆக்சிஜன் வெளியேற்றப்படுகிறது. இந்த நிலையில், புவி வெப்பமயமாதலைத் தடுப்பதில் பெரும் வரமாக இருக்கும் இந்த அமேசான் காடுகள், மனித பேராசை காரணமாக அழிக்கப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. இதற்காகப் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு போராடும் இயற்கை ஆர்வலர்கள் மர்மமான முறையில் கொல்லப்படுவதாக லண்டனைச் சேர்ந்த குளோபல் விட்னஸ் என்ற ஆய்வு நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது. 2012 முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான 12 ஆண்டுகளில், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் 2,253 பேர் மர்மமாக கொல்லப்பட்டதாக அறிக்கை ஒன்றை அது வெளியிட்டுள்ளது. குறிப்பாக, எஸ்காசு ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டதில் இருந்து லத்தின் அமெரிக்காவில் மட்டும் சுமார் 1,000 சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மர்மமான முறையில் கொல்லப்பட்டதாக அது தெரிவிக்கிறது.
மேலும் அந்த அறிக்கைபடி, அதிகபட்சமாக பிரேசிலில் 365 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கொலம்பியாவில் 250 பேரும், பெருவில் 225 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும், 124 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உலகளவில் கடந்த ஆண்டில் மட்டும் 142 பேர் மரணமடைந்துள்ளதாகவும், அதில், 82 சதவீதம் லத்தின் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, கடந்த 3 ஆண்டுகளாக கொலம்பியாவில்தான் அதிகபட்சமாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 2023ஆம் ஆண்டில் 79 பேர் கொல்லப்பட்ட நிலையில், 2024இல் 48 பேர் உயிரிழந்துள்ளனர். சுற்றுச்சூழல் பாதிப்புக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் குளோபல் விட்னஸ் வலியுறுத்தியுள்ளது.