பிரான்ஸ் வன்முறை: ஆப்பிள் ஷோரூமை சூறையாடிய போராட்டக்காரர்கள்! லேப்டாப், போன்களை அள்ளிச்சென்ற மக்கள்!
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் நகருக்கு உட்பட்ட நான்டர் புறநகரில் நீல் என்ற 17 வயதான வட ஆப்பிரிக்க சிறுவன், கடந்த 5 நாட்களுக்கு முன் போக்குவரத்து நிறுத்தம் பகுதியில் நிற்காமல் விதிமீறி சென்று விட்டான் என கூறி போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த அந்த சிறுவன் உயிரிழந்து விட்டான்.
இதுபற்றி தெரிந்ததும், மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், அரசுக்கு எதிராக பாரிஸ் உள்பட பல்வேறு புறநகர் பகுதிகளில் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறுவன் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பல்வேறு பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் வருத்தமும், கண்டனமும் தெரிவித்தனர்.
போராட்டம் வன்முறையாக மாறியதில், பள்ளிகள் மற்றும் காவல் நிலையங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டும், தாக்கப்பட்டும் உள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் ஜெரால்டு டார்மனின் தெரிவித்துள்ளார். பாரிசில் வன்முறை பரவியதில், 40-க்கும் மேற்பட்ட கார்கள் தீக்கிரையாகி உள்ளன. 170 காவல் துறை அதிகாரிகள் காயம் அடைந்து உள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட 180-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
வன்முறை பரவாமல் கட்டுப்படுத்தும் நோக்கில் 45 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். நிலைமையைக் கட்டுப்படுத்த தலைநகர் பாரிஸ் புறநகர் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தலைநகரில் இரவு நேரங்களில் பொதுப் போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடும் கொந்தளிப்பில் இருக்கும் போராட்டக்காரர்கள் அரசு உடமைகளை தாக்கிய நிலை மாறி, தற்போது தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் அவர்களின் இலக்காகி உள்ளன. ஆப்பிள், நைக், ஜாரா, லூயிஸ் உய்ட்டன் போன்ற உலகப்புகழ் பெற்ற நிறுவனங்களின் கடைகள் சூறையாடப்பட்டு, பொருட்கள் களவாடப்படுகின்றன.
குறிப்பாக ஸ்ட்ராஸ்பர்க் நகரில் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனையகம் மக்களின் தாக்குதலுக்கு உள்ளானது. அங்கிருந்த ஆப்பிள் போன்கள், லேப்டாப்களை அந்த கும்பலில் இருந்த சிலர் அள்ளிச் சென்றுள்ளனர்.
இதேபோன்று இரவில் ஏராளமான கடைகள் குறிவைத்து தாக்கப்பட்டு, பொருட்களை களவாடிச் செல்லும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. பாரிஸ் நகர வீதிகள் போர்க்களத்தைப் போன்று காட்சியளிப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.