இலங்கை போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக இடிக்கப்பட்டதால், யாழ்ப்பாணத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து , மாணவர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது, அப்பாவி தமிழ் இன மக்கள் கொல்லப்பட்டதை நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில், முள்ளிவாய்க்கால் நினைவிடம் கடந்த 2019ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த நினைவிடம் அமைக்கப்படும்போதே, அதாவது 2018ஆம் ஆண்டு அதற்கான கட்டுமான பணிகளை நிறுத்துமாறு இலங்கை உயர்கல்வி அமைச்சகம், பல்கலைக்கழக மானியக் குழுவும் யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு உத்தரவிட்டிருந்தது. எனினும் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்கும் பணி மாணவர்களால் முடிக்கப்பட்டு, நினைவேந்தல் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு ராஜபக்ச சகோதரர்கள் அரசின் உத்தரவால், முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை இடிப்பதற்கான வேலைகள் நடந்தன. இதையடுத்து, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள், தமிழ் தேசிய கட்சியினர் உள்ளிட்டோர் பல்கலைக்கழக வளாகத்தில் கூடினர்.
ராணுவம், காவல்துறை, சிறப்பு அதிரடிப் படையினர் உள்ளிட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நினைவிடம் தகர்க்கப்படுவதை படம் பிடிக்கச் சென்ற செய்தியாளர் தாக்குதலுக்கு உள்ளானார்.
பல்கலைக்கழக வாளகத்தைச் சுற்றி, சிறப்பு அதிரடிப் படையினர் மோட்டார் சைக்கிளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். இலங்கை அரசின் நடவடிக்கைக்கும், அதற்கு துணை போன யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் எதிராக மாணவர்கள் உள்ளிட்டோர் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. எனினும் எதற்கும் செவிசாய்க்காத இலங்கை அரசு, நேற்று இரவோடு இரவாக முள்ளிவாய்க்கால் நினைவு தூணை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கியது.
இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் கூறியிருந்த நிலையில், தமிழர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவிடம் இடிக்கப்பட்டுள்ளது