பாங்காக்கில் சிறை போன்று வடிவமைக்கப்பட்ட ஹோட்டல்
தாய்லாந்தில் ஒரு ஹோட்டல் சிறை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் அங்கு தங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் சிறை போன்று வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு ஹோட்டல் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இங்குள்ள அறைகள் அனைத்தும் சிறைச்சாலைகளில் உள்ளவற்றைப் போன்றே வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. தங்குவதற்காக வருவோருக்கு கைதிகளுக்கான சீருடை போன்ற ஆடைகள் வழங்கப்படுகின்றன. விளக்குகள், கதவுகள் போன்றவையும் சிறையைப் போன்றே வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
1994-ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான "தி ஷாஷான்க் ரெடம்ப்சன்" திரைப்படத்தைப் பார்த்து இப்படியொரு விடுதியை வடிவமைக்கும் எண்ணம் வந்ததாக இதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒரேயொரு முறை வரும் வாடிக்கையாளர்களைக் குறிவைத்தே இந்தத் திட்டத்தைத் தொடங்கியதாகவும், ஆனால் ஒருமுறை வந்தவர்கள் மீண்டும் திரும்பி வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.