தற்கொலை செய்து கொள்வேன் என இங்கிலாந்து பிரதமருக்கு மெயில் அனுப்பிய டெல்லி பெண்...!
இந்திய தலைநகர் டெல்லியில் வசித்து வரும் 43 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் (புதன்கிழமை) இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அவசர உதவி வேண்டி இ-மெயில் செய்துள்ளார்.
‘அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் எனக்கு உதவி கிடைக்கவில்லை என்றால், நான் தற்கொலை செய்து கொள்வேன்’ என அந்த மெயிலில் அவர் தெரிவித்துள்ளார்..
அந்த தகவலை பிரதமரின் உதவியாளர்கள் பார்த்தவுடன் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு தெரிவித்துள்ளனர்.
உடனடியாக தூதரக அதிகாரிகள் வெளியுறவு துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவித்துள்ளனர். அதன்படி அந்த பெண் இ - மெயிலில் குறிப்பிட்டிருந்த டெல்லியின் ரோஹிணி பகுதி காவல் நிலைய அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
‘அந்த பெண் அவரது முகவரியை சரிவர சொல்லலாமல் இருந்தார். நள்ளிரவு நேரம் என்றும் பாராமல் வீடு வீடாக சோதனையிட்டோம். சுமார் இரண்டு மணி நேர தேடுதலுக்கு பிறகு அந்த பெண்ணின் வீட்டை அடைந்தோம்.
நாங்கள் அங்கு சென்ற போது அந்த வீடே அலங்கோலமாக இருந்தது. பூனைகள் அங்கும் இங்கும் உலவின. அந்த பெண் குளித்தே பலநாட்கள் இருக்கும் என்பதை அறிந்து கொண்டோம். வீடு முழுவதும் துர்நாற்றம் வீசியது.
எங்களது முதற்கட்ட விசாரணையில் அவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருபவர் என்பதும், நிதி சிக்கலில் தவித்து வருகிறார் என்பதையும் அறிந்து கொண்டோம்.
அவருக்கு மனநல மருத்துவர்கள் ஆலோசனை கொடுத்து வருகின்றனர்’ என போலீசார் தெரிவித்துள்ளனர்.