சிங்கப்பூர் | 14-ஆவது முறையாக ஆளுங்கட்சி வெற்றி!
சிங்கப்பூரில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று அங்கு பொதுத் தேர்தல் நடைபெற்றது. இது, சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்தபின் நடைபெறும் 14-வது பொதுத்தேர்தல் ஆகும். இத்தேர்தலிலும், ஆளும் மக்கள் செயல் கட்சியே (PAP) ஆதிக்கம் செலுத்தியது. அதன்படி, மொத்தமுள்ள 97 இடங்களில் 87 இடங்களை அக்கட்சியே கைப்பற்றியுள்ளது. சிங்கப்பூர் தேர்தலில் தொடர்ச்சியாக 14-ஆவது முறையாக ஆளுங்கட்சி வெற்றி பெற்றுள்ளது.
இதையடுத்து, சிங்கப்பூர் பிரதமராக லாரன்ஸ் வோங்கேவே மீண்டும் தொடர இருக்கிறார். மறுபுறம், 60 ஆண்டுக்கு மேலாக ஆட்சி செய்யும் மக்கள் செயல் கட்சியை எதிர்த்து பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர்கள் கட்சி போட்டியிட்டது. இதில், அக்கட்சி 26 தொகுதிகளில் போட்டியிட்டு 10இல் வெற்றி பெற்றுள்ளது. சிங்கப்பூர் தேர்தலில் மீண்டும் வென்ற பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.