“பயங்கரவாதிகளை வேரறுக்க தயார்” - சிறிசேனவிடம் முஸ்லிம் பிரதிகள் உறுதிமொழி

“பயங்கரவாதிகளை வேரறுக்க தயார்” - சிறிசேனவிடம் முஸ்லிம் பிரதிகள் உறுதிமொழி
“பயங்கரவாதிகளை வேரறுக்க தயார்” - சிறிசேனவிடம் முஸ்லிம் பிரதிகள் உறுதிமொழி

பயங்கரவாதிகளை முற்றிலுமாக வேரறுப்பதற்கு அனைத்து விதத்திலும் பாதுகாப்புத்துறையினருக்கு உதவத் தயாராக இருப்பதாக அதிபர் சிறிசேனவிடம் இலங்கை முஸ்லிம் பிரதிகள் வாக்குறுதி அளித்துள்ளனர். 

அதிபர் மைத்ரிபால சிறிசேனவை அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை உள்ளிட்ட முஸ்லிம் சிவில் அமைப்பினர் சந்தித்து பேசினர். அப்போது பயங்கரவாத சவால்களிலிருந்து நாட்டைக் காக்க எந்தவிதத்திலும் உதவத் தயாராக இருப்பதாக உறுதியளித்தனர். 

மேலும், அப்பாவி மக்களை படுகொலை செய்த கொடிய பயங்கரவாதிகளை தமது இனத்தவராக கருதப்போவதில்லை என்றும் முஸ்லிம் சமூகமானது அடிப்படைவாதத்தையும் பயங்கரவாதத்தையும் முழுமையாக நிராகரிப்பதாகவும் முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். அதனால் இந்த அடிப்படைவாத பயங்கரவாதிகளை முற்றாக வேரறுப்பதற்கு தாங்கள் பாதுகாப்புத்துறையினருக்கு அனைத்து விதத்திலும் உதவத் தயாராக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அனைத்து முஸ்லிம் இனத்தவரையும் பயங்கரவாதிகளாக கருத வேண்டாம் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். 

இச்சந்திப்பில், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா, குடியரசுத் தலைவரின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன, அரச அதிகாரிகள், பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன ஆகியோரும் பாதுகாப்புத்துறை பிரதானிகளும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை உள்ளிட்ட சுமார் 40 முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பின்போது, பயங்கரவாத சவால்களிலிருந்து நாட்டை விடுவித்து தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்பும் செயற்பாட்டிற்கு தமது குறுகிய அரசியல் நோக்கத்திற்காக சிலர் முன்வைக்கும் கருத்துக்கள் தடையாக உள்ளதாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னை பற்றிய சரியான புரிந்துணர்வுடன் நாட்டு மக்கள் அனைவருக்கும் சமாதானமான, சுதந்திரமான தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான தமது பொறுப்பை நிறைவேற்றுவதே நாட்டை நேசிக்கும் அனைத்து பிரஜைகளினதும் கடமையாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com