இனி அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் 6 லட்சம் சீன மாணவர்கள்.. பச்சைக்கொடி காட்டிய ட்ரம்ப்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சர்வதேச மாணவர்கள் மீதான ஒடுக்குமுறையைத் தொடர்ந்து கொண்டிருந்தாலும், அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் 6 லட்சம் சீன மாணவர்கள் சேர்ப்பது தொடர்பாக பேசி இருக்கிறார். என்ன விவரம் என பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஓவல் அலுவலகத்தில் பேசியபோது, நாங்கள் சீன மாணவர்களை உள்ளே வர அனுமதிக்கப் போகிறோம். 6,00,000 மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். இது மிகவும் முக்கியமானது. நாங்கள் சீனாவுடன் இணைந்து செயல்படப் போகிறோம் என குறிப்பிட்டார்.
அதே நேரத்தில், சீனாவின் அரிய பூமி காந்தங்களை அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்வதை உறுதி செய்ய வேண்டும் அல்லது 200 சதவீத வரிகளை எதிர்கொள்ள வேண்டும் என்று எச்சரித்தார். ஆனால் ,உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையிலான வர்த்தக பதட்டங்கள் சீன மாணவர்களைப் பாதிக்காது என்றும், அவர்கள் இன்னும் அமெரிக்காவில் படிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் உறுதியளித்தார்.
முன்னதாக, அதிபர் டிரம்பின் கீழ், அமெரிக்க வெளியுறவுத்துறை உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையுடன் இணைந்து சீன மாணவர்களுக்கான விசாக்களை தீவிரமாக ரத்து செய்யும். இதில் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு உள்ளவர்கள் அடங்குவர். சீன மக்கள் குடியரசு மற்றும் ஹாங்காங்கிலிருந்து வரும் அனைத்து விசா விண்ணப்பங்களின் ஆய்வை எதிர்காலத்தில் மேம்படுத்த விசா நடைமுறைகளை நாங்கள் திருத்துவோம்" என்று வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ அப்போது கூறியிருந்தார்.
ஆனால், தற்போது அமெரிக்க பல்கலைக்கழங்களில் படிக்க சீன மாணவர்களுக்கு பிரச்னை இல்லை என ட்ரம்ப் கூறியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், ட்ரம்பின் MAGA (Make America Great Again) ஆதரவாளர்களிடமிருந்து இது கடுமையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது.