’என் குழந்தைக்காக நாடு திரும்பணும்’: ஐஎஸ்-ல் சேர்ந்த லண்டன் மாணவி உருக்கம்!

’என் குழந்தைக்காக நாடு திரும்பணும்’: ஐஎஸ்-ல் சேர்ந்த லண்டன் மாணவி உருக்கம்!

’என் குழந்தைக்காக நாடு திரும்பணும்’: ஐஎஸ்-ல் சேர்ந்த லண்டன் மாணவி உருக்கம்!
Published on

லண்டனில் இருந்து சிரியாவுக்கு தப்பிச்சென்று ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்த லண்டன் மாணவி, தற்போது தனது குழந்தைக்காக நாடு திரும்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு, சமூக வலைத்தளங்கள் மூலம் உலகம் முழுவதும் உள்ள இளம் வயதினருக்கு மூளை சலவை செய்து அவர்களை சிரியாவுக்கு அழைக்கிறது. அதன்படி பல்வேறு நாடுகளில் இருந்து பலர், சிரியா சென்று அந்த அமைப்பில் சேர்ந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு இவர்களின் மூளைச் சலவையில் மயங்கிய லண்டனைச் சேர்ந்த மூன்று மாணவிகள், சிரியா சென்று ஐஎஸ் அமைப்பில் சேர்ந்தனர். 


அந்த மாணவிகளுள் 15 வயதான ஷமிமா பேகமும், கடிஜா சுல்தானாவும் பங்களாதேஷைப் பூர்விகமாகக் கொண்டவர்கள். மற்றொரு மாணவி பெயர் அமிரா அபாஸ். இவர்கள் லண்டனில் உள்ள பெத்னல் க்ரீன் அகாடாமியில் படித்து வந்தனர். 

ஒரு நாள், ’வெளியே சென்று வருகிறோம்’ என்று வீட்டில் கூறிவிட்டு சென்ற அவர்கள், பிறகு அங்கிருந்து சிரியாவுக்குச் சென்றுவிட்டனர். அப்போது இந்த செய்தி லண்டனில் பரபரப்பானது.

நான்கு வருடத்துக்குப் பிறகு, தற்போது சிரியாவின் அகதி முகாமில் இருக்கும் ஷமிமா பேகம், தான் நாடு திரும்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். நிறைமாதக் கர்ப்பிணியாக இருக்கும் அவர், தனது குழந்தைக்காக நான் எப்படியாவது லண்டன் திரும்பிவிடுவேன் என்றும் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, ‘’நான்கு வருடத்துக்கு முன் நாங்கள் விருப்பப்பட்டுதான் இந்த அமைப்பில் சேர்ந்தோம். அதில் எனக்கு வருத்தம் ஏதும் இல்லை. வந்த 10 நாட்களில் இஸ்லாம் மதத்துக்கு மாறியிருந்த டச்சுக்காரர் ஒருவரை திருமணம் செய்துகொண்டேன். அவருக்கு 27 வயதுக்கு மேல் இருக்கும். அவர், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் போரிட்டு வந்தார். எங்களுடன் வந்த சுல்தானா, குண்டு வீச்சில் உயிரிழந்து விட்டார்.

எனக்கு இரண்டு குழந்தை பிறந்தது. இரண்டுமே உடல் நலக்குறைவால் இறந்துவிட்டன. இப்போது நிறைமாதக் கர்ப்பிணியாக இருக்கிறேன். 39 ஆயிரம் பேர் உள்ள அகதி முகாமில் நானும் இருக்கிறேன். என் குழந்தையை வளர்ப்பதற்காகவாவது நான் லண்டன் திரும்ப வேண்டும். எப்படியாவது அங்கு சென்றுவிடுவேன். 

என் கணவர் சில நாட்களுக்கு முன் அமெரிக்க ஆதரவுபெற்ற சிரிய அரசு படையிடம் சரணடைந்துவிட்டார். ஆனால், அவர் எங்கு கொண்டு செல்லப்பட்டார் என்று தெரியாது. அவரை பற்றியத் தகவல் எனக்குத் தெரியவில்லை. 

இங்கு நாங்கள் சாதாரண வாழ்க்கையைதான் வாழ்ந்தோம். திடீர் திடீரென்று வெடிக்கும் குண்டு சத்தங்கள்தான் பயமே தவிர, மற்றபடி ஒன்றுமில் லை. இப்போது எல்லாம் முடிந்துவிட்டது. அவர்கள் சிறு குழுவாக இருக்கிறார்கள். அதிக குழப்பமும், ஊழலும் இருக்கிறது. அவர்கள் வெற்றி பெற தகுதியானவர்கள் இல்லை’’ என்றார்.

ஷமிமா பேகம் லண்டன் திரும்ப வேண்டும் என்று சொன்னாலும், அந்நாட்டு அரசு, இவர்களை நாட்டுக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com