நேரு to மோடி! ’போப்’களை சந்தித்த பிரதமர்களும்..இந்தியாவுக்கு வருகை தந்த போப்பாண்டவர்களும்!

நேரு to மோடி! ’போப்’களை சந்தித்த பிரதமர்களும்..இந்தியாவுக்கு வருகை தந்த போப்பாண்டவர்களும்!
நேரு to மோடி! ’போப்’களை சந்தித்த பிரதமர்களும்..இந்தியாவுக்கு வருகை தந்த போப்பாண்டவர்களும்!

கிறிஸ்தவ மத தலைவர்களில் முதன்மையான போப்பாண்டவர் அடுத்த ஆண்டு இந்தியா வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரதமர் மோடி, போப்பாண்டவர் ஃபிரான்சிஸ் இந்தியாவுக்கு வரவேண்டும் என அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பின் பேரில் அவர் இந்தியா வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய பிரதமர்களில் ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி, ஐ.கே.குஜ்ரால், வாஜ்பாய், நரேந்திர மோடி ஆகியோர் மட்டுமே வாடிகன் சென்று அப்போதைய போப்களை சந்தித்துள்ளனர்.

இந்தியப் பிரதமர்கள் சந்தித்த போப்பாண்டவர்கள்

1955இல் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, போப் எட்டாம் பயஸை வாடிகனில் சந்தித்து உரையாடினார். இந்த சந்திப்பின்போது, நேருவின் மகளான இந்திரா காந்தியும் உடன் இருந்தார். 1981இல் வாடிகன் சென்ற அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, அங்கு போப் இரண்டாம் ஜான் பாலை சந்தித்துப் பேசினார். ஐ.கே.குஜ்ரால் இந்திய பிரதமராக இருந்தபோது, 1997இல் இத்தாலிய பயணத்தின்போது, வாடிகனில் போப் இரண்டாம் ஜான் பாலை சந்தித்துப் பேசினார். அடல் பிகாரி வாஜ்பாய், இந்திய பிரதமராக இருந்தபோது, 2000ஆம் ஆண்டில் வாடிகனில் போப் இரண்டாம் ஜான் பாலை சந்தித்துப் பேசினார். கடந்த 2021ஆம் ஆண்டு இந்திய பிரதமரான நரேந்திர மோடி, வாடிகன் சென்று போப்பாண்டவர் பிரான்சிஸைச் சந்தித்துப் பேசினார்.

இந்தியாவுக்கு வந்த போப்பாண்டவர்கள்

இந்த நிலையில், 1964 ஆம் ஆண்டு நற்கருணை மாநாட்டில் பங்கேற்பதற்காக போப் ஜான் பால் இந்தியாவிற்கு முதன்முறையாக வருகைபுரிந்தார். இவரை, அப்போதைய ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், துணை ஜனாதிபதி ஜாகிர் உசேன், பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி ஆகியோர் வரவேற்றனர். 1986ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டாம் போப் ஜான்பால் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இவர் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்றார். இந்த பயணத்தின் போது சென்னைக்கு அவர் வருகை தந்தார். தொடர்ந்து இவரே, 1999ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் இரண்டாம் ஜான் பால் இந்தியாவிற்கு வருகை தந்தார். அப்போது விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் போன்ற அமைப்பினர் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக செய்திகள் கூறப்படுகின்றன.

-ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com