இங்கிலாந்து தலைநகர் லண்டனில் அகேனம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற பிரம்மாண்ட தை பொங்கல் திருவிழா அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இங்கிலாந்து தலைநகரான லண்டனில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தை திங்கள் முதல் நாளான பொங்கல் பண்டிகையையும், உழவர் திருநாளையும் தமிழர்கள் அனைவரும் உற்சாகத்துடனும், மண்ணின் மனத்துடனும் கொண்டாடுகின்றனர். அந்த வகையில் லண்டன் மாநகரில் மண் பானையுடன் ஊர்கூடி பொங்கும் பிரம்மாண்ட தை பொங்கல் பெருவிழாவிற்கு அகேனம் அறக்கட்டளையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
அதன்படி லண்டனின் மேற்குப் பகுதியிலுள்ள அவுஸ்லோ நகரின் பெல்தம் (FELTHAM) பகுதியின் நட்சத்திர அரங்கில் நடைபெற்ற பொங்கல் பெருவிழாவில் இனம், மதம், மொழி கடந்து அனைவரும் கலந்துகொண்டு பொங்கல் வைத்து வழிபட்டனர். இயற்கைக்கு நன்றி செலுத்தும் விதமாக பெரும் திடலில் பறையிசை முழங்க, மக்கள் குடும்பம் குடும்பமாக பொங்கல் வைத்து உற்சாகமாகவும் சிறப்பாகவும் கொண்டாடினர். ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டிய பொங்கல் திருவிழாவில் தமிழர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். மேலும் உழவனுக்கு உயிர்கொடுத்த உன்னத கடவுள் என்று போற்றப்படும் “ஜான் பென்னி குவிக்” குடும்பம் இந்த பொங்கல் விழாவில் கலந்துகொண்டு பொங்கல் வைத்தனர்.