'வாட்ஸ்ஆப்' வதந்தியை நம்பி அதிகாரியை தீ வைத்து எரித்த கும்பல்; மெக்சிகோவில் பயங்கரம்!

'வாட்ஸ்ஆப்' வதந்தியை நம்பி அதிகாரியை தீ வைத்து எரித்த கும்பல்; மெக்சிகோவில் பயங்கரம்!
'வாட்ஸ்ஆப்' வதந்தியை நம்பி அதிகாரியை தீ வைத்து எரித்த கும்பல்; மெக்சிகோவில் பயங்கரம்!

சமூக வலைதளங்களில் எதை பகிர்ந்தாலும் அதன் உண்மைத்தன்மை என்ன என ஆராயாமல் அது வதந்தியாகவோ, பொய் செய்தியாக இருக்கும் என தெரியாமல் பலரும் அதனை பகிர்ந்து வருகிறார்கள்.

இவற்றை கட்டுப்படுத்த சமூக வலைதள நிறுவனங்கள் சார்பிலும், அரசு நிர்வாகம் தரப்பிலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் வழக்கம் போல வதந்திகள் பரவுவது என்னவோ நின்றபாடில்லை. அப்படியான பதிவுகளை, செய்திகளை பகிர்வதன் மூலம் சமூகத்தில் பல வகைகளில் சட்டம் ஒழுங்கு சீர்கெடுவதற்கு சாதமாகி வருகிறது.

இப்படி இருக்கையில் மெக்சிகோவில் ஒரு இளம் அரசியல் ஆலோசகரை குழந்தை கடத்தல்காரர் என சமூக வலைதளங்களில் பரவிய வதந்தியை நம்பி, சரமாரியாக அடித்து தாக்கியதோடு, கும்பல் ஒன்று உயிரோடு எரித்தே கொன்றிருக்கிறது என CBC news தளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

31 வயதான டேனியல் பிகாசோ ஒரு குழந்தை கடத்தல்காரர் என வாட்ஸ் அப் குழுக்களில் வந்த குறுஞ்செய்தியை உண்மை என எண்ணி 200க்கும் மேற்பட்ட உள்ளூர் மக்கள் கும்பல் மத்திய மாநிலமான பியூப்லாவில் பொது வெளியில் வைத்து அவரை சரமாரியாக தாக்கியிருக்கிறார்கள்.

இதனை அறிந்து உடனே விரைந்து வந்த போலீசார் தாக்குதல் கும்பலை தடுத்து டேனியல் பிகாசோவை மீட்டு ரோந்து காரில் வைத்தனர். ஆனால் போலீசாரின் பாதுகாப்பை மீறி டேனியலை தரதரவென இழுத்து அவர் மேலும் தாக்குதலுக்கு உட்படுத்தியிருக்கிறது அந்த கும்பல்.

மேலும் உச்சக்கட்ட ஆக்ரோஷத்தில் அங்கிருந்த விளையாட்டு மைதானத்துக்கு வெளியே வைத்து டேனியல் பிகாசோவை உயிருடன் தீ வைத்து எரித்திருக்கிறார்கள். இதனால் துடிதுடித்து இறந்தே போயிருக்கிறார் டேனியல்.

சம்பவம் நடந்த Papatlazolco பகுதியை நிர்வகிக்கும் Huachinango என்ற நகராட்சி நிர்வாகம், கடந்த வெள்ளியன்று நடந்த இந்த கொடூர நிகழ்வை “இது காட்டுமிராண்டித்தனம். நீதியல்ல” என கண்டனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே அந்த கும்பல் வெளியேறிய பிறகு இறந்த டேனியலின் உடலை மீட்டிருக்கிறது காவல்துறை. இதனையடுத்து பொய் செய்திகளின் பின்னால் செல்லாமல் சமூக வலைதளங்களில் பகிரப்படும் அனைத்து வகையான பதிவுகளையும் சரிபார்க்கவும் என அந்த நகராட்சி நிர்வாகம் கடந்த ஞாயிறன்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறது.

உயிரிழந்த டேனியல் பிகாசோ, கடந்த மார்ச் 2022 வரை லெஜிஸ்லேட்டிவ் சேம்பர் ஆஃப் டெப்யூட்டியில் ஆலோசகராகப் பணியாற்றினார். மெக்சிகோவின் சில பகுதிகளில், குறிப்பாக காவல்துறை மெதுவாக வரும் தொலைதூரப் பகுதிகளில் இது போன்ற கும்பல் தாக்குதல்கள் தொடர்ந்து அரங்கேறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com