
நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த ஆண்டு (2022) பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதால், உக்ரைனும் ரஷ்யாவுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர் ஒன்றரை ஆண்டுகளைக் கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதில், மத்திய ஐரோப்பிய நாடான போலந்தும் உக்ரைனுக்கு 320 பீரங்கிகளையும், 14 மிக்-29 ரக போர் விமானங்களையும் வழங்கி உதவியது. இந்த போரின் காரணமாக உக்ரைனின் தானிய ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. கருங்கடல் பகுதியில் இருந்து உக்ரைன் தானியம் ஏற்றுமதி செய்வதை ரஷ்யா தடுத்து வைத்துள்ளது. இதனால் உக்ரைன் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தானியங்கள், உலகின் பல நாடுகளுக்கு ஐரோப்பிய நாடுகள் வழியாகச் சென்றடைகின்றன.
இந்த நிலையில் ஐரோப்பியாவின் பல்கேரியா, ஹங்கேரி, போலந்து, ருமேனியா மற்றும் ஸ்லோவேகியா ஆகிய நாடுகளின் உள்ளூர் விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில் அந்நாடுகளின் வழியாக தானியம் எடுத்துச்செல்ல அனுமதித்தாலும் அந்நாடுகளில் அவற்றை விற்பனை செய்வதை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்திருந்தது. ஆனால் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஐரோப்பிய ஒன்றியம் இந்த தடையை விலக்குவதாக அறிவித்தது. இருப்பினும், அந்த 5 நாடுகளில் போலந்து, ஹங்கேரி மற்றும் ஸ்லோவேகியா ஆகிய 3 நாடுகள், தங்கள் நாட்டு உள்ளூர் விவசாயிகளைக் காக்கும் வகையில் இந்த தடை விலகலை ஏற்க மறுத்துவிட்டன.
இதனை எதிர்க்கும்விதமாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, ஐ.நா. கூட்டமைப்பின் பொதுச் சபையில் உரையாற்றியபோது, ’சில ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிற்கு மறைமுகமாக உதவி செய்கின்றன’ எனக் குறிப்பிட்டார். இதற்கு எதிர்வினையாக தற்போது போலந்து நாட்டு பிரதமர் மாட்யுஸ் மொராவிக்கி (Mateusz Morawiecki), ’உள்நாட்டு ராணுவ பலத்தை அதிகரிப்பதில் கவனம்செலுத்த வேண்டியுள்ளதால், உக்ரைனுக்கு ராணுவத் தளவாடங்களை அனுப்புவது இனி நிறுத்தப்படும்’ என அறிவித்துள்ளார்.