அபுதாபியில் முதல்முறையாக திறக்கப்படும் இந்து கோயில்: அமீரகத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

புதிதாகக் கட்டப்பட்டுள்ள இந்துக் கோயிலைத் திறந்துவைக்க, பிரதமர் மோடி 2 நாள் அரசுமுறை பயணமாக அமீரகம் சென்றுள்ளார்.
அமீரகத்தில் மோடி
அமீரகத்தில் மோடிட்விட்டர்

நிறைவடைந்த 17வது மக்களவை:

மத்திய பாஜக அரசின் கடைசி இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. பின்னர் பிப்ரவரி 1ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதன்மூலம் 17வது மக்களவை நிறைவடைந்தது.

அமீரகம் புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று (பிப்.13) ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். அங்கு, சென்ற அவருக்கு அந்நாட்டு ராணுவ மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் பிரதமர் மோடியை வரவேற்றார். தொடர்ந்து அந்நாட்டு அதிபா் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யானுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளாா்.

இதையடுத்து பிரதமர் மோடி அபுதாபியில் 'அஹ்லன்' மோடி என்ற தலைப்பில் நடைபெறும் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய சமூகத்தினரைச் சந்திக்கிறார். இந்த நிகழ்ச்சியில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். அபுதாபி ஜாயித் ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் நடைபெறும் இந்த பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் 700 நடனக்கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். கலை நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி பார்வையிடுகிறார். தொடர்ந்து மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையில் பிரதமர் மோடி இந்திய மக்களிடையே உரையாற்றுகிறார்.

முதல்முறையாக இந்துக் கோயிலைத் திறந்துவைக்கும் பிரதமர் மோடி

இதையடுத்து, இன்றைய நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு அவர் நாளை (பிப்.13) அமீரகத்தில் புதிதாக கட்டப்பட்டு உள்ள இந்துக் கோயில் மற்றும் அதன் வளாகத்தை மோடி திறந்து வைக்கிறார். அடுத்து, துபாயில் நடைபெறும் உலக அரசு உச்சி மாநாட்டில் கவுரவ விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகிறார். அப்போது அமீரக அதிபர், ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் மற்றும் அமீரக துணை அதிபர் ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்துப் பேசுகிறார். இதில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து பிரதமர் மோடி அன்று இரவே அமீரக சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்து அபுதாபியில் இருந்து இந்தியா புறப்படுகிறார்.

7வது முறையாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மோடி!

பிரதமர் மோடி கடந்த 2015ஆம் ஆண்டு அரசு முறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு முதல்முறையாகப் பயணம் மேற்கொண்டார். அப்போது அமீரகத்தில் வசிக்கும் இந்திய இந்து மக்களுக்காக மோடியின் வேண்டுகோளை ஏற்று அபுதாபியில் இந்து கோயில் கட்டுவதற்கு அமீரக அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து துபாய் - அபுதாபி ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரக்பா அருகே முரைக்கா பகுதியில் இந்து கோயில் கட்ட 55 ஆயிரம் சதுர அடி இடம் அபுதாபி அரசு சார்பில் ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து, 2018ஆம் ஆண்டு கோயில்கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. இதையடுத்து, கோயில் கட்டும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. அபுதாபியில் கட்டப்பட்டுள்ள இந்து கோயில் நாளை கும்பாபிஷேகத்துடன் திறக்கப்பட உள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டுமுதல் தற்போது வரை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பிரதமா் மோடி 7வது முறையாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக அமீரகம் பயணம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com