லண்டன் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு எதிராக அங்குள்ள தமிழர்கள் #GoBackModi என்ற முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
ஸ்வீடன் சுற்றுப்பயணத்தை முடித்த பின்னர் பிரதமர் மோடி, பிரிட்டன் சென்றுள்ளார். லண்டன் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் நாட்டுத் தலைவர்களின் கூட்டத்தில் மோடி பங்கேற்று பேசினார். அதைத்தொடர்ந்து பிரிட்டன் பிரதமர் தெரசா மேவையும் சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பின் போது, இருநாட்டு உறவுகள் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்நிலையில் லண்டனில் வாழும் தமிழர்கள் மோடிக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காஷ்மீரில் சிறுமி ஆசிஃபா கொலை செய்யப்பட்டது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காது உள்ளிட்ட பிரச்னைகள் குறிப்பிட்டு அவர்கள் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்தின் போது அவர்கள் மோடிக்கு எதிராக, #GoBackModi என்ற வாசகத்தை பதாகைகளில் எழுதிக்காட்டியுள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் சென்னை வந்த மோடிக்கு எதிராக #GoBackModi என்ற வாசகம் ஒலிக்கப்பட்டு, அது ட்விட்டரில் உலகளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.