பிரதமர் மோடியின் இரண்டு நாள் அமெரிக்க பயணம்.. எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?
பிரதமர் மோடி பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு அடுத்து அமெரிக்கா புறப்படுகிறார். மோடியுடனான சந்திப்பில் அரசு வரி தொடர்பான நெருக்கடிகளை அதிபர் ட்ரம்ப் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் 2ஆவது முறையாக பொறுப்பேற்ற பிறகு அவரை பிரதமர் மோடி முதல்முறையாக நேரில் சந்திக்க உள்ளார். 2 நாட்கள் பயணமாக அமெரிக்கா செல்லும் அவர் இரு தரப்பு விவகாரங்கள் குறித்து ட்ரம்ப்புடன் பேச உள்ளார். இதில் பிரதானமாக வரி தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
குறிப்பாக அமெரிக்க பொருட்களுக்கு வரியை குறைக்க ட்ரம்ப் வலியுறுத்துவார் எனத் தெரிகிறது. இது தவிர அமெரிக்காவிலிருந்து போர் விமானங்கள், ட்ரோன்கள் உள்ளிட்ட பாதுகாப்பு தளவாடங்கள், எரிபொருள் உள்ளிட்டவற்றை இந்தியா வாங்குவதற்கும் ட்ரம்ப் வலியுறுத்துவார் என்றும் கூறப்படுகிறது.
அமெரிக்காவிலிருந்து இறக்குமதியை அதிகரிப்பதுடன் அமெரிக்க பொருட்களுக்கு இறக்குமதி வரியை குறைப்பதால் இந்திய தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இந்தச் சூழலில் பிரதமர் மோடி அளிக்கப்போகும் பதிலும் இந்தச் சந்திப்பில் முக்கியத்துவம் பெறுகிறது.