” மீனவர் விவகாரத்தில் மனிதாபிமானத்துடன் அணுக” - பிரதமர் இலங்கையில் பேசியது என்ன?
3 நாள் பயணமாக இலங்கைக்கு சென்றடைந்துள்ள பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு அவரை இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹெர்தா, சுகாதாரத்துறை அமைச்சர் நலிந்தா ஜெயதிஸ்ஸா மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்ட ஐந்து முக்கிய அமைச்சர்கள் வரவேற்றனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கையின் உயரிய விருதான மித்ர விபூஷணா விருதை இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக வழங்கி கௌரவித்தார்.
மேலும், கொழும்புவில் இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக- பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா - இலங்கை இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. டிஜிட்டல் மயமாக்கல், பாதுகாப்பு, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானநிலையில், இந்தியாவுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
இந்தநிலையில், இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில்,
” மீனவர் விவகாரத்தில் மனிதாபிமானத்துடன் அணுக இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளது . மீனவர்களை உடனே விடுவிக்கவும் அவர்களின் படகுகளை ஒப்படைக்கவும் வலியுறுத்தினேன்; மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்னைகள் குறித்து பேசினோம். இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக 10,000 வீடுகளை இந்தியா கட்டிக் கொடுத்துள்ளது இலங்கையில் உள்ள மூன்று கோயில்களை சீரமைக்க இந்தியா உதவும்; இந்தியாவில் உள்ள தமிழ் மக்களின் கோரிக்கைகளை இலங்கை பூர்த்தி செய்யும் என நம்புகிறேன். தீவிரவாத தாக்குதல், கொரோனா, பொருளாதார பிரச்சினையில் இலங்கை தவித்தபோது இந்தியா துணை நின்றது.” என்று தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க
” இலங்கையின் தனித்துவ டிஜிட்டல் சேவைக்காக இந்தியா ரூ.300 கோடி நிதி தந்ததற்கு நன்றி; டிஜிட்டல் பொருளாதார மேம்பாட்டின் முக்கியத்துவத்தை இலங்கை உணர்ந்திருக்கிறது. இந்தியா- இலங்கைக்கு இடையிலான நட்பு நெருக்கமானது: இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரும் வகையில், எந்த செயலும் இந்த மண்ணில் நடக்காது. '' என்று தெரிவித்துள்ளார்.
இவர்களின் சந்திப்பு, பல காலமாக இருந்துவரும் மீனவர்களின் பிரச்னையில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.