யானைக் குட்டியின் பாச மழைக்கு அடிபணியும் பாகன் (வீடியோ)
குட்டி யானை ஒன்று பாகனுடன் கூடிக் கொஞ்சும் வீடியோ ஒன்று ட்விட்டரில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலங்களவை உறுப்பினர் பரிமல் நாத்வானி அவரது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் குட்டி யானை ஒன்று முகாமிற்குள் அடைக்கப்பட்டுள்ளது. அதனை சுற்றிலும் தடுப்பு போடப்பட்டுள்ளது. அதன் அருகே உட்கார்ந்து அந்தக் குட்டியானையின் பராமரிப்பாளர் அங்குள்ள தடுப்பு கம்பிகளுக்கு பெயிண்ட் அடித்து கொண்டிருக்கிறார். யானை குட்டியின் பராமரிப்பாளரான அவரை தடுப்பை மீறி துதிக்கையை நுழைத்து யானைஅரவணைத்துக் கொள்ள அழைக்கிறது. அவர் கவனிக்காமல் இருப்பதை உணர்ந்த அந்தக் குட்டி யானை மீண்டும் தடுப்பை மீறி எகிறி குதிக்க முயற்சிக்கிறது. அதனை உணர்ந்த அவர் உடனே யானையின் அன்பிற்கு அடிபணிகிறார்.
இந்தக் குட்டி யானைக்கும் பராமரிப்பாளருக்கும் இடையே உள்ள பாசமழை அப்படியே வீடியோவாக பதிவாக்கப்பட்டுள்ளது. அதனைத்தான் ஜார்க்கண்ட் மாநிலங்களவை உறுப்பினர் பகிர்ந்துள்ளார். அவர் தனது பதிவில் ‘ யானைக்குட்டியின் விளையாட்டுத்தனம் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. மனிதனுக்கும் விலங்குக்குமான சிறந்த வாழ்விற்கு இது ஒரு உதாரணம்’ என்று குறிப்பிட்டுள்ளார். வீடியோவை பார்த்த யாரும் அவ்வளவு எளிதில் புன்னகைக்காமல் கடந்து செல்ல முடியாத அளவு உள்ளது.
‘டெய்லி மெயில்’ விவரத்தின்படி இந்த வீடியோ கடந்த ஆண்டு தாய்லாந்தில் உள்ள சியாங் மாயில் உள்ள மோ சா யானைகள் முகாமில் படமாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இருபது வயது மதிக்கத்தக்க யானை பராமரிப்பாளருக்கும் அவரை அரவணைக்க ஆசைப்படும் யானைக் குட்டிக்கும் இடையேயான இந்த வீடியோ இப்போது பலரது மனிதநேயத்தை தட்டி எழுப்பியுள்ளது. மேலும் இந்த வீடியோவை ஆயிரக்கணக்கான நபர்கள் கண்டுகளித்துள்ளனர்.