ரஷ்ய உறவை வலுப்படுத்தத் திட்டம்: சிரியாவில் ஆயுதப் பயிற்சியை நிறுத்த ட்ரம்ப் முடிவு
சிரியாவில் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஆயுதக் குழுவினருக்கு அமெரிக்காவின் சி.ஐ.ஏ. உளவு அமைப்பு அளித்து வரும் பயிற்சியை நிறுத்தி வைக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முடிவு செய்திருக்கிறார்.
இது தொடர்பாக வாஷிங்டன் போஸ்ட் இதழ் செய்தியை அமெரிக்க அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ரஷ்யாவுடனான உறவை வலுப்படுத்தும் நோக்கத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆறு ஆண்டுகளாக நடந்துவரும் போரில், கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா பயிற்சி அளித்து வருகிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா எடுத்த இந்த முயற்சிகளுக்கு குறைந்த அளவு பலன்களே கிடைத்திருக்கின்றன. தற்போதைய நிலையில், சிரியா அதிபர் அசாத்தின் படைகள், ரஷ்ய ராணுவம், ஈரான் ஆதரவுடன் இயங்கும் ஆயுதக் குழுக்கள் ஆகியவற்றுக்கே வெற்றி கிடைக்கும் சூழல் உருவாகி இருக்கிறது.