இறப்புக்கு பிறகும் கைவிலங்கு போடுவீர்களா? - பாக். மனிதாபிமானமற்ற செயல்
பாகிஸ்தானில் இறந்த நிலையில் கைவிலங்குடன் இருக்கும் பேராசிரியரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் சர்கோதா பல்கலைக்கழகத்தில் பேராசியரான மியான் ஜவத் அஹ்மத் கடந்த அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார். சட்ட விதிகளுக்கு புறம்பாக கல்விநிலையங்களை திறந்து அதன் மூலம் பல மாணவர்களை ஏமாற்றி பணம் பறித்ததாக அவரை பாகிஸ்தானின் என்ஏபி (The country’s National Accountability Bureau) என்ற அமைப்பு கைது செய்தது. கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் ஜவத் அஹ்மத் காவல்நிலையத்திலேயே உயிரிழந்தார்.
அவர் உயிரிழப்பு குறித்து தகவல் தெரிவித்துள்ள காவல்துறையினர் காவல்நிலையத்தில் கைதியாக இருந்த ஜவத் அஹ்மத்துக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது, உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார் என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் போதும், அவர் இறந்த பிறகும் கூட அவரின் கைவிலங்கு விடுவிக்கப்படாமல் இருந்துள்ளது. உயிரிழந்த பிறகும் கைவிலங்குடன் இருக்கும்பேராசியரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவ இந்த நிகழ்வுக்கு பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தானின் மூத்த பத்திரிகையாளர் ரசா அஹ்மத் ரூமி, கைவிலங்குடன் இறந்து கிடக்கும் பேராசியரின் புகைப்படம் உண்மையிலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதே போல் பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரையும் ஒரு வழக்குக்காக கைது செய்த என்ஏபி அவரை கைவிலங்குடன் ஊர்வலமாக அழைத்துச் சென்றது. இது மனிதநேயத்திற்கு எதிரான வன்முறை. என்ஏபி அமைப்பு அதன் செயல்பாட்டுக்காக வெட்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து தனது கண்டனத்தை பதிவு செய்த சமூக ஆர்வலர் நஸ் பலூச், இறந்த ஒருவருக்குக்கூட கைவிலங்கு மாட்டியிருப்பது ஒரு மனிதாபிமானமற்ற செயல். இறந்தவர்களைக் கூட தண்டிக்கும் என்ஏபி அமைப்பின் செயல் சோகமான ஒன்று என்று தெரிவித்துள்ளார்.