சட்டவிரோதக் கொலைகளால் புகழ் பெற்ற பிலிப்பைன்ஸ் அதிபர் துதர்தே

சட்டவிரோதக் கொலைகளால் புகழ் பெற்ற பிலிப்பைன்ஸ் அதிபர் துதர்தே
சட்டவிரோதக் கொலைகளால் புகழ் பெற்ற பிலிப்பைன்ஸ் அதிபர் துதர்தே

பிலிப்பைன்ஸில் நடைபெற்றுவரும் ஆசியான் மாநாட்டில், அதிகமாகக் கவனம் பெற்றிருப்பவர் அந்நாட்டு அதிபர் ரொட்ரிகோ துதர்தே.

பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரொட்ரிகோ துதர்தே, போதைப் பொதைப்பொருள்களைப் பயன்படுத்தினாலும், விற்றாலும் எவ்விதக் கருணையுமின்றிக் கொல்வார். சட்டம் என்ன சொல்கிறது என்பதைப் பற்றி இவருக்கு கவலையில்லை. மனித உரிமை ஆர்வலர்களின் பேச்சையும் இவர் கேட்பதில்லை. கொலை செய்வதற்கென்றே தனியாக ஒரு கும்பலை இவர் வைத்திருக்கிறார். 72 வயதாகும் அவர் 1986-ஆம் ஆண்டில் இருந்து கடந்த ஆண்டுவரை தேவோ நகரின் மேயராக இருந்தவர். குற்றவாளிகள் எனத் தெரிந்தால், நீதிமன்றத்துக்குச் செல்வதற்கு முன்னதாகவே அவர்களைச் சுட்டுக் கொன்றுவிடும் வழக்கத்தைக் கொண்டவர் துதர்தே. இது ஊகமோ, ஆதாரமில்லாத தகவலோ கிடையாது. சட்டத்தை மீறிக் கொலைகளைச் செய்ததாக அவரே ஒப்புக் கொள்கிறார்.

இவரது கொலைகளைக் கண்டு மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்தாலும், போதைப் பொருளால் பாதிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களில் ஒரு பிரிவினர் இவரது அதிரடி நடவடிக்கைகளை ஆதரிக்கிறார்கள். கடந்த ஆண்டு நடந்த அதிபருக்கான தேர்தலில் இவர் வெற்றி பெற்றதற்கு இந்த ஆதரவுதான் காரணம். ஆனால் நாட்டைத் தூய்மைப் படுத்துவதாகக் கூறி குடிசையில் வாழும் ஏழை மக்களையும் தெருவோரக் குழந்தைகளையும் இவரது ஆட்கள் கொலை செய்ததாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன.

தேவோ நகர மேயராக இருந்தபோது இவர் பயன்படுத்தி வந்த கொலை செய்யும் குழுவில் முன்னாள் காவல்துறை அதிகாரிகள், பயில்வான்கள் போன்றோர் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களுக்கு அதிநவீன ஆயுதங்களும், இரு சக்கர வாகனங்களும் வழங்கப்பட்டிருந்தன. காவல்துறையினரின் ஆதரவுடன் கொலைகள் நடந்ததால், கொலை செய்யப்படவேண்டிய நபர் எங்கிருக்கிறார், அவரை எப்படிக் கொல்ல வேண்டும், நிகழ்விடத்தில் இருந்து எப்படித் தப்பிச் செல்ல வேண்டும் என்பவையெல்லும் முன்கூட்டியே தெளிவாகத் திட்டமிடப்படும். கொலை செய்வோர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படுவதில்லை. ஒரு கொலையைச் செய்வதற்கு கொலைக்கூட்டத்தில் அங்கம் வகிக்கும் ஒரு நபருக்கு சுமார் 1000 ரூபாய் பணம் வழங்கப்பட்டதாகவும் மனித உரிமைகள் அமைப்பு கண்டறிந்திருக்கிறது. இவர் மேயராக இருந்த காலத்தில் தேவோ நகரத்தில் மட்டும் 1000 க்கும் மேற்பட்டோர் சட்டத்துக்குத் தெரியாமல் கொலை செய்யப்பட்டனர்.

மேயராக இருந்தபோது, கடத்தல் கும்பலைச் சேர்ந்த மூன்றுபேரை தாமே சுட்டுக் கொன்றதாக துதர்தே பலமுறை ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்தக் கொலைகளுக்கு அஞ்சியே, குற்றச் செயல்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் குறைந்தது. அதே நேரத்தில் நகரத்தின் மக்கள்தொகை கணிசமாக அதிகரித்தது. பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாகவும் தேவோ உருவெடுத்தது. செயலில் மாத்திரமல்ல, பேச்சிலும் கடுமையானவர் துதர்தே, அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா முதல் ஐக்கிய நாடுகள் சபை வரை துதர்தேவின் நாவுக்கு யாரும் தப்பியதில்லை. ஒபாமாவையே கடுமையான சொற்களால் திட்டிய துதர்தே, ஐக்கிய நாடுகள் சபையில் இருந்து வெளியேறப் போவதாகவும் மிரட்டியிருக்கிறார். இப்போது உலகிலேயே மிகக் கடுமையான அதிபராகக் கருதப்படும் துதர்தேவை, கொலைக்குழுவுடன் தொடர்புபடுத்தியே சர்வதேச ஊடகங்கள் அறிமுகம் செய்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com