வெடித்துச் சிதறிய எரிமலை.. 3 ஆயிரம் கி.மீ எகிறிய சாம்பல்.. மிரளவிட்ட இயற்கை கோரம்!
செய்தியாளர் - கார்த்திகேயன்
மிக மோசமான இயற்கைப் பேரிடர்களில் எரிமலை வெடிப்பும் ஒன்று. இந்த ஆண்டில் மட்டும், ரஷ்யா, ஜப்பான், தென் அமெரிக்காவில் உள்ள சிலி, கொலம்பியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், இத்தாலி போன்ற நாடுகளில் குறிப்பிடத்தக்க அளவில், எரிமலை வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகின. குறிப்பாக, அனாக் கிரகடவு, எட்னா, செமேரு, இபு, கன்கலான், தால் போன்ற எரிமலைகள் வெடித்துச் சிதறிய சம்பவங்கள், உலக அளவில் பெரும் கவனத்தை ஈாத்திருந்தது. இந்தநிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஆபத்தான எரிமலைகளில் ஒன்று வெடித்துச் சிதறியுள்ளது.
அதாவது, பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மிகவும் சுறுசுறுப்பான மற்றும் ஆபத்தான எரிமலைகளில் ஒன்று மேயோன். இயற்கையாகவே உள்ள தனது துல்லியமான கூம்பு வடிவத்தால், உலக அளவில் புகழ்பெற்ற எரிமலையாக இது கருதப்படுகிறது. பிலிப்பைன்ஸின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த எரிமலை, தற்போது திடீரென வெடித்துச் சிதறியுள்ளது. இந்த எரிமலை வெடிப்பு காரணமாக, அதன் வாயில் இருந்து வெளியேறிய கரும்புகையும், சாம்பல் துகள்களும், சுமார் 3 கிலோ மீட்டர் உயரத்திற்கு விண்ணில் எழும்பியுள்ளன. இந்த எரிமலை வெடிப்புச் சம்பவத்தை தொடர்ந்து, அங்கு எரிமலை எச்சரிக்கை நிலை 3-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நிலை 3 என்பது எரிமலையின் செயல்பாடு தீவிரம் அடைந்துள்ளது என்பதையும், ஆபத்து நெருங்கிவிட்டது என்பதையும் குறிக்கும் ஒரு சொல்லாடலாகப் பார்க்கப்படுகிறது.
எரிமலை சுற்றி வசிக்கும் பொதுமக்கள், பாதுகாப்பான நிவாரண முகாம்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அந்த எரிமலை அமைந்துள்ள அல்பே மாகாணத்தில் உள்ள பள்ளிகளுக்கு, விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று கூறும் அதிகாரிகள், காற்றில் பரவும் அடர்ந்த சாம்பல் படலங்களால், கடுமையான சுவாசப் பிரச்னைகள், கண் எரிச்சல் ஏற்படும் என்றும், இதனால் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

