பிலிப்பைன்ஸ்: சோடா வாங்கச் சென்ற சிறுமி... சூட்கேஸில் அடைத்துவைத்து கடத்தல்!
பிலிப்பைன்ஸ் நாட்டில் 8 வயது சிறுமி ஒருவர், அருகிலிருந்த கடைக்கு சோடா வாங்கச் சென்றுள்ளார். ஆனால், அவர் நீண்டநேரமாகியும் வராததால், பதறிப்போன பெற்றோர் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது அப்பகுதிகளில் இருந்த சிசிடிவி வீடியோ காட்சிகளை ஆராய்ந்தபோது, முகமூடி அணிந்த ஒரு நபரால் அந்தச் சிறுமி சூட்கேஸில் அடைத்துவைத்து கடத்திச் செல்லப்படுவது தெரியவந்தது. இதையடுத்து அந்தச் சிறுமியின் தாயார் காவல்துறையில் புகார் அளித்தார்.
அவர் அளித்த புகாரின் பேரில் போலீசாரும் வழக்குப்பதிந்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்துள்ளனர். அதன்படி, பக்கிலிட் மாவட்டத்தில் ஓர் இடத்தில் அதுபோன்ற சூட்கேஸைத் தள்ளிச் செல்லும் ஒரு நபரைக் கண்டுபிடித்துள்ளனர்.
பின்னர், விரைந்துசென்று போலீசார் அவரைக் கைது செய்து, சிறுமியை மீட்டனர். அப்போது சிறுமி எந்தவித பாதிப்புமின்றி நலமுடன் இருந்தார். அவர் மூச்சுவிடுவதற்காக சூட்கேஸின் மேல் பகுதியில் ஜிப்பை மூடாமல் இருந்துள்ளார் அந்த நபர். மேலும், கை, கால்கள், வாய் ஆகிய பகுதிகள் டக்ட் டேப்பால் ஒட்டப்பட்டிருந்தது.
சிறுமியைக் கடத்தியது குறித்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் அந்தச் சிறுமி வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் பராமரிப்பாளராக ஓராண்டுக்கும் மேலாக பணியாற்றியவர் என தெரியவந்துள்ளது. சிறுமியைக் கடத்தியை ஒப்புக்கொண்ட அவர், சிறுமியின் தாத்தா, பாட்டிக்குப் பாடம் கற்ப்பிப்பதற்கே இந்த குற்றத்தைச் செய்தேன் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர், ”அவர்கள் வீட்டில் இருந்த பைகள் மற்றும் சில பொருட்களைத் நான் திருடியதாக என்மீது குற்றஞ்சாட்டினர். இதற்கு தண்டனை தரவே அவர்களின் சிறுமியைக் கடத்தினேன். மற்றபடி, நான் அந்தச் சிறுமியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தவில்லை.
இதனால், அந்த குடும்பத்தினர் என்னை மன்னிப்பார்கள் என்று நினைக்கிறேன். நான் அவரைக் கடத்தியபோது அவருக்கு உணவளித்தேன்; விளையாட அனுமதித்தேன். சிறுமியைக் கடத்திய 6 மணி நேரத்திற்குப் பிறகு அவருடைய வீட்டில் ஒப்படைக்கலாம் என்றிருந்தேன். அதற்குள் கண்டுபிடித்து விட்டனர்” எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது அந்தச் சிறுமி தாயாருடன் இணைந்து நலமுடன் உள்ளார். இதுகுறித்து அந்தச் சிறுமியின் தாயார், “இப்படியும் செய்வார்களா என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை” என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.