கச்சா எண்ணெய் விலை குறைந்தும், குறையாத பெட்ரோல், டீசல் விலை!
கச்சா எண்ணெய் விலையைக் கட்டுப்பாட்டில் வைக்கும் எண்ணெய் வள நாடுகளின் அமைப்பான ஒபெக்கின் ஒப்பந்தத்தை ரஷ்யா நிராகரித்ததன் காரணமாக கச்சா எண்ணெய் விலை சுமார் 30 சதவிகிதம் வரை சரிவு கண்டது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக எரிபொருளுக்கான தேவை குறைந்த நிலையில், கச்சா எண்ணெய்யின் தேவையைக் காட்டிலும் உற்பத்தி அதிகரித்துள்ளது.
எனவே இதனை சரிசெய்யும் விதமாக ஒபெக் நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துக்கொள்ள ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தின. அதற்கு ரஷ்யா மறுப்பு தெரிவித்த நிலையில், அந்நாட்டிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சவுதி அரேபியா உற்பத்தியை அதிகரிப்பதாக அறிவித்ததோடு, விலையையும் குறைத்தது. இதன் காரணமாக பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 31 டாலர் வரை கீழே சென்றது.
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை கணிசமாக இறங்கியும் பெட்ரோல், டீசல் விலை பெரிய அளவில் குறையவில்லை. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 41 காசுகள் குறைந்து 73 ரூபாய் ஒரு காசுக்கு விற்கப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 25 காசு விலை இறங்கி 66 ரூபாய் 58 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 31 டாலர் வரை கீழே சென்றது. கடந்த 20 நாட்களில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை சுமார் 45 சதவிகிதம் வரை சரிந்து இன்று 9 சதவிகிதம் வரை மீட்சி கண்டுள்ளது. சந்தை மதிப்பின் அடிப்படையில் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறி வரும் நிலையில், பெட்ரோல், டீசல் விலை பெரியளவில் குறையவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.