\
Perseid Meteor Shower to tomorrows
Model imagegoogle gemeni

50 டூ 100 விண்கல் மழை.. ஒரே வரிசையில் 6 கோள்கள்.. நாளை வானில் நிகழப்போகும் அதிசயம்!

நாளை (ஆகஸ்ட் 12) இரவு வானில் பெர்சீட்ஸ் விண்கல் மழை (Perseid Meteor Shower) அதன் உச்சக்கட்டத்தை எட்டவுள்ளது. தவிர 6 கோள்களும் ஒரே திசையில் தோன்ற இருக்கின்றன.
Published on

வானில் அதிசயங்கள் நிகழ்வது அவ்வப்போது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் நாளை (ஆக.12) 6 கோள்களின் அணிவகுப்பும், பெர்சிட் விண்கல் மழையும் நிகழ இருக்கிறது. வியாழன், புதன், செவ்வாய், யுரேனஸ், சனி மற்றும் நெப்டியூன் ஆகிய 6 கோள்கள் ஒரே திசையில் அணிவகுக்க இருக்கிறது. அதாவது, இக்கோள்கள், தங்கள் சுற்றுப்பாதைகளில் வெவ்வேறு இடங்களில் இருந்தபடியே வானில் கோள்களின் ஒரு பிரம்மாண்டமான வரிசை தொகுப்பாகக் காட்சியளிக்க இருக்கிறது. பூமியிலிருந்து பார்க்கும்போது, ​​அவை ஒரே பகுதியில் தோன்றி காட்சியளிப்பதாகக் கண்களுக்குத் தெரியும்.

Model image
Model imagegoogle gemeni

இந்த நிகழ்வு, பொதுவாக ’கோள்களின் அணிவகுப்பு’ என்று அழைக்கப்படுகிறது. நாளை அதிகாலை சூரிய உதயத்திற்கு 30 முதல் 60 நிமிடங்களுக்கு முன்பு, கிழக்கு முதல் தெற்கு வரையிலான அடிவானப் பகுதியில் இந்த அணிவகுப்பைக் காணலாம். இவை சூரிய உதயத்திற்கு சற்று முன்பு கிழக்கு அடிவானத்திற்கு மிக அருகில் தாழ்வாகத் தோன்றும். அடிவானம் தெளிவாக இருந்தால் மட்டுமே வெறும் கண்ணால் பார்க்க முடியும். இதைக் காண்பதற்கு பைனாகுலர் (Binoculars) தேவைப்படும். இது ஒருபுறமிருக்க, மறுபுறம் பெர்சிட் விண்கல் மழையும் (Perseid Meteor Shower) இதே நாளில் உச்சத்தில் இருக்கப்போகிறது. ஸ்விஃப்ட்-டட்டில் (Swift-Tuttle) என்ற வால்நட்சத்திரம் விண்வெளியில் விட்டுச் சென்ற தூசி மற்றும் பாறைத் துகள்கள் பூமியின் வளிமண்டலத்தில் மிக வேகமாகக் கடந்து செல்லும்போது எரிந்து சாம்பலாகி ஒளிக்கீற்றுகளாகத் தோன்றுகின்றன. அதாவது அவை, அதிவேகமாக வளிமண்டலத்தில் நுழைவதால் காற்றுடன் ஏற்படும் உராய்வு காரணமாக அவை சூடாகி நெருப்பு பந்துகளை போல ஒளிவிடுகின்றன.

இவ்வாறாக, பிரகாசமாக எரியும் கற்கள் நெருப்புப் பந்துகளைப்போல மழையாகப் பொழிவதாக நமக்குத் தென்படும். அதுவே, ’விண்கல் அல்லது எரிகல் மழை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த பெர்செய்ட் விண்கல் மழை, நாளை அதன் உச்சத்தை எட்டும் என்று கூறப்படுகிறது. வடகிழக்கு வானில் உள்ள பெர்சியஸ் (Perseus) விண்மீன் கூட்டத்தின் பகுதியில் இருந்து இவை நாலாபுறமும் சிதறுவதுபோல் தோன்றும். நாளை நள்ளிரவு 12:00 மணி முதல் ஆகஸ்ட் 13 அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு வரை இதைப் பார்ப்பதற்கு மிகவும் ஏற்ற நேரமாகும்.

google gemeni

இவற்றை வட அரைக்கோளத்தில், அதாவது பூமத்திய ரேகைக்கு வடக்கே உள்ள பூமியின் ஒரு பாதியில் இருந்து நன்றாகப் பார்க்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெளிவான வானிலையில் ஒரு மணி நேரத்திற்கு 50 முதல் 100 விண்கற்கள் பொழியக் கூடும் என நாசா தெரிவித்துள்ளது. இருட்டான இடத்தைத் தேர்வுசெய்து, சுமார் 30 நிமிடங்கள் கண்கள் இருளுக்குப் பழக்கப்படும்வரை காத்திருந்து திறந்தவெளியில் இதைக் காணலாம். நாளை அமாவாசை (New Moon) என்பதால், நிலவின் வெளிச்சம் குறுக்கிடாமல் வானம் முழுமையாக இருட்டாக இருக்கும். இதனால் மங்கலான விண்கற்களையும் மிகத் தெளிவாகக் காணக்கூடிய வாய்ப்பு உள்ளதாக எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com