நிரந்தரமாக வீட்டில் இருந்து வேலை பார்க்கும் முறைக்கு மைக்ரோசாப்டின் சிஇஓ சத்ய நாதெள்ளா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த உலகநாடுகள் போராடி வருகின்றன. சிறிய நாடுகள் முதல் வல்லரசு நாடுகள் வரை கொரோனாவால்
பீதியடைந்துள்ளன. உயிரிழப்புகள், பொருளாதார சரிவுகள் என கொரோனா பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவைக்
கட்டுப்படுத்த பல நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தி மக்களை வீடுகளுக்குள்ளேயே இருக்கச் சொல்லி வலியுறுத்துகின்றன.
பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதித்துள்ளன. ஊரடங்கு வரையிலும் இந்த வொர்க் ஃப்ரம் ஹோம்
முறையைக் நிறுவனங்கள் கடைபிடிக்கும் எனத் தெரிகிறது. ஆனால் ஃபேஸ்புக், கூகுள் போன்ற நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வீட்டில்
இருந்து வேலை பார்க்கும் காலத்தை நீட்டித்துள்ளன. 2020 முழுவதுமே வீட்டில் இருந்து வேலைப் பார்க்கலாம் என்ற அறிவிப்பை
வெளியிட்டுள்ளன. ட்விட்டர் நிறுவனமோ, வாய்ப்பு உள்ளவர்கள் நிரந்தரமாகவே வீட்டில் இருந்து வேலை பார்க்கலாம் என தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நிரந்தரமாக வீட்டில் இருந்து வேலை பார்க்கும் முறைக்கு மைக்ரோசாப்டின் சிஇஓ சத்ய நாதெள்ளா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், நிரந்தரமாக வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் முறையானது தொழிலாளர்களின் மனநிலையை பாதிக்கும். மேலும் சமூகத்துடனான ஒரு தொடர்பை அவர்கள் இழக்க நேரிடும் என தெரிவித்துள்ளார். மேலும், அருகில் அமர்ந்துக்கொண்டு கலந்துரையாடி ஆலோசிப்பதற்கு இணையாக வீடியோ அழைப்புகள் நிச்சயம் பயன் தராது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.