அமெரிக்கா | வலுக்கும் குரல்கள்.. எலான் மஸ்க்கிற்கு எதிராக இடைக்காலத் தடை நீடிப்பு!
அமெரிக்காவில் நிர்வாக சீர்திருத்தத் துறையை ஏற்படுத்தி அதன் தலைவராக எலான் மஸ்க்கை அதிபர் ட்ரம்ப் நியமித்துள்ளார். இதைத்தொடர்ந்து மிகப்பெரிய அளவில் பணியாளர்கள் வேலை நீக்கம், பல்வேறு அமைப்புகள் கலைப்பு, நிதியுதவியை முற்றிலும் நிறுத்தவது அல்லது குறைப்பது என்ற ரீதியில் மஸ்க்கின் நடவடிக்கைகள் அமெரிக்கா முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. மஸ்க்கின் நடவடிக்கைகளை எதிர்த்து அரசு ஊழியர்கள் நாடெங்கும் போராட்டம் நடத்திவருகின்றனர். மேலும், அமெரிக்க அரசில் தொழிலதிபர் எலான் மஸ்க்கிற்கு வழங்கப்பட்டுள்ள அதீத அதிகாரங்களுக்கு எதிராக மாநில அரசுகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
தவிர, கோடிக்கணக்கான அமெரிக்கர்களின் ஊதிய விவகாரத்தை கையாள மஸ்க்கிற்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை எதிர்த்து சில மாநில அரசுகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன. இந்த நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத, சட்ட அங்கீகாரம் இல்லாத நபரிடம் கட்டுக்கடங்காத அதிகாரங்களை வழங்குவது நாட்டின் அரசமைப்பு சட்டத்தை மீறும் செயல் என்றும் மாநில அரசுகளின் தலைமை வழக்கறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதற்கிடையே நாட்டின் நிதித்துறை அமைச்சக பணிகளில் தலையிட மஸ்க்கிற்கு வழங்கப்பட்டு அதிகாரத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மன்ஹட்டன் நீதிமன்றம் மேலும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.