வெறும் ஐந்து விநாடி வீடியோவ் ஒன்று சாத்தியமில்லாததை சாத்தியப்படுத்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும். ஆம், ஐந்து விநாடி வீடியோ ஒன்று இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒருங்கிணைத்துள்ளது; இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் உள்ள நெட்டிசன்களை நேர்மறை எண்ணத்துடன் மகிழ்ச்சியைப் பகிர வைத்துள்ளது. இதனை சாத்தியப்படுத்தியவர், பாகிஸ்தானை சேர்ந்த 19 வயதான தனனீர் மொபின் என்ற பெண்.
அவர் பிப்ரவரி 6-ஆம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவைப் பதிவேற்றியபோது, இரு நாட்டிலும் ஒரே இரவில் ஸ்டாராக மாறுவார் என்பது அவருக்கும் தெரியாது. ஆனால், ஓவர் நைட்டில் இரண்டு நாடுகளிலும் அவர் உச்சரித்த வார்த்தைதான் மீம்களாக, வைரலாக மாறியது.
அப்படி என்ன சொன்னார் என்கிறீர்களா?
அதில், சிறப்பு எதுவும் இல்லை. அந்த வைரல் வீடியோவில், அவர் தனது சொந்த உருது மொழியில் "யே ஹுமாரி கார் ஹை, யே ஹம் ஹைன், யே ஹுமாரி பாவ்ரி ஹோ ரஹி ஹை'' என்றார். அதாவது, "இது எங்கள் கார், இது நாங்கள், இது எங்கள் 'பாவ்ரி' " என்று மட்டும்தான் கூறியிருக்கிறார். மேலும், அந்த வீடியோவில் அவரின் நண்பர்கள் இருக்கிறார்கள். வீடியோவின் கடைசியில் 'பார்ட்டி' என்ற ஆங்கில வார்த்தையைப் பயன்படுத்துகிறார். ஆனால் அதை "பாவ்ரி" என்று உச்சரிக்கிறார். அவ்வளவுதான்.
இதை மொத்த பாலிவுட் உலகமும், பாகிஸ்தானியர்களும் மீம் டெம்ப்ளேட்களாக, வீடியோக்களாக சித்தரித்து வெளியிட்டு வருகின்றனர். தீபிகா படுகோன் முதல் கிரிக்கெட் வீரர்கள் வரை அதைப் பகிர்ந்து வருகின்றனர்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை வென்ற பிறகு பாகிஸ்தான் வீரர்கள் அந்தப் பெண் செய்ததைபோல் செய்துள்ளனர். ஒரு இந்திய டி.ஜே தனது "யே ஹுமாரி பாவ்ரி ஹோரி ஹை" (நாங்கள் பார்ட்டி செய்கிறோம்) என்ற சொற்றொடரை எடுத்து அதை ஒரு பாடலாக மாற்ற அதுவும் வைரலாகி வருகிறது. இதுபோக விளம்பர பிராண்டுகள் முதல் போலீஸ் அதிகாரிகள் வரை, தங்கள் விளம்பரத்துக்கு விழிப்புணர்வுக்கு "பாவ்ரி" வார்த்தையை பயன்படுத்தி வருகின்றனர்.
19 வயதான தனனீர் மொபின், பாகிஸ்தானின் வடக்கு நகரமான பெஷாவரைச் சேர்ந்தவர். இன்ஸ்டாகிராம் சமூக ஊடகப் பக்கத்தில் அதிகமான ஃபாலோயர்களை பெற்றவர். அவரது பதிவுகள் பொதுவாக ஃபேஷன் மற்றும் அலங்காரம் ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளன.
இந்த வைரல் வீடியோ குறித்து அவர் கூறும்போது, ``எனக்கு பார்ட்டி என்பதை சொல்வது எப்படி என்று தெரியும். அது பாவ்ரி அல்ல என்றும் எனக்குத் தெரியும். நீங்கள் அனைவரையும் (என் இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்கள்) சிரிக்க வைப்பதற்காகவே இதைச் செய்தேன். உலகெங்கிலும் இவ்வளவு சிரமங்களும், பிளவுகளும் இருக்கும் நேரத்தில் எல்லையைத் தாண்டி அன்பைப் பகிர்வதை விட சிறந்தது என்ன?" என்று பிபிசிக்கு அளித்த பேட்டியில் விவரித்திருந்தார்.
அவர் கூறியது போல, பாகிஸ்தான் - இந்தியா இடையே, எதிர்மறையான செய்திகளே வந்த வண்ணம் இருக்கின்ற நிலையில், வீடியோவில் உள்ள மகிழ்ச்சியான முகங்கள் இரு நாடுகளிலும் உள்ள மக்களை உற்சாகப்படுத்தி வருகின்றன. இரு நாடுகளுக்கிடையில் பல தசாப்தங்களாக இருக்கும் விரோதம் பெரும்பாலான விஷயங்களில் பொதுவாக முரண்பட வைக்கின்றன. ஆனால், இதுபோன்ற சில சம்பவங்கள் இரு நாடுகளையும் ஒருங்கிணைப்பதுகூட வரவேற்கக்கூடிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.
- மலையரசு