கொரோனா வைரஸ் பாதிப்பு: ஜப்பான் கப்பல் பயணிகள் சொந்த நாட்டுக்கு திரும்ப தொடங்கினர்
கொரோனா வைரஸ் பாதிப்பால் ஜப்பான் கடற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் இருந்த பயணிகள் அவரவர் நாட்டுக்கு செல்லத் தொடங்கிவிட்டனர்.
பிரமாண்டமான தி டைமண்ட் பிரின்சஸ் சொகுசுக் கப்பல், ஆயிரத்து 600 பயணிகள் மற்றும் ஆயிரத்து 100 பணியாளர்கள் உட்பட 3 ஆயிரத்து 711 பேருடன் ஹாங்காங்கிலிருந்து கடந்த மாதம் 25ஆம் தேதி ஜப்பானை நோக்கி புறப்பட்டது. சுமார் 2 ஆயிரத்து 64 கடல் மைல் தொலைவை கடந்து அந்தக் கப்பல் இம்மாதம் 2 ஆம் தேதி தனது பயணத்தை நிறைவு செய்தது. அதில் வந்த ஹாங்காங்கைச் சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அந்த கப்பல் யோகாஹாமா துறைமுகத்தின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டது.
பின்னர் கப்பலில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது 6 இந்தியர்கள் உட்பட 542 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கப்பலின் கண்காணிப்பு காலம் நிறைவடைந்தது. இதையடுத்து கொரோனா வைரஸ் அறிகுறி இல்லாதவர்களும், வைரஸ் தொற்று ஏற்படாதவர்களும் கப்பலிலிருந்து வெளியேற ஜப்பான் அரசு அனுமதி வழங்கியுள்ளது. முதற்கட்டமாக சுமார் 500 பேர் மட்டுமே வெளியேற்றப்படுவர் என்றும் கப்பலில் இருக்கும் அனைவரும் வெளியேற குறைந்தது 3 நாட்களாவது ஆகும் எனவும் ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவைத் தொடர்ந்து தென் கொரியாவும், டைமண்ட் பிரின்ஸஸ் கப்பலில் உள்ள தங்களது நாட்டு மக்களை அழைத்துவர ஜப்பானுக்கு விமானத்தை அனுப்பியுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, ஹாங்காங், இத்தாலி, கனடா, இஸ்ரேல் ஆகிய நாடுகளும் தங்களது குடிமக்களை அழைத்துவர ஏற்பாடுகளை செய்து வருகின்றன.