
அமெரிக்காவின் நிவேடா மாகாணத்தில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் வசிப்பவர் டிராவிஸ் டாஸின். இவரின் மனைவி அமண்டா ஸ்டாம்பர். இதில் அமண்டா ஸ்டாம்பர் இவரின் முதல் மனைவியல்ல எனக் கூறப்படுகிறது. டிராவிஸூக்கு ஏற்கெனவே 6 குழந்தைகள் இருந்துள்ளனர். அமண்டா ஸ்டாம்பர் - டிராவிஸ் டாஸின் தம்பதிக்கு ஒரு குழந்தை இருந்துள்ளது.
இப்படி இந்த தம்பதிக்கு மொத்தம் 7 குழந்தைகள் உள்ளனர். தற்போதும் அமண்டா 5 மாத கர்ப்பிணியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், டிராவிஸ் டாஸின் தன் 6 குழந்தைகளையும் நாய் கூண்டுக்குள் அடைத்துவைத்துச் சித்திரவதை செய்துள்ளார்.
உடனிருந்த அமண்டா ஸ்டாம்பரால், இதை தடுக்க முடியவில்லை என சொல்லப்படுகிறது. இருப்பினும் ஒருகட்டத்தில் இதை பொறுத்துக்கொள்ள முடியாமல் தன்னைப்பற்றியும் தன் கணவரைப்பற்றியும் தானே போலீஸுக்குத் தகவல் தெரிவித்துள்ளார் அமண்டா.
அதன்பேரில், அந்த வீட்டுக்கு சென்ற காவலர்கள், குழந்தைகளின் நிலைமையைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதில் 1 குழந்தை மிகவும் ஆபத்தான நிலையிலும், 2 குழந்தைகள் கண்கள் வீங்கிய நிலையிலும் காப்பாற்றப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பின்னர், விசாரணை செய்தபோது குற்றத்தைப் பெற்றோரே ஒப்புக் கொண்டுள்ளனர்.
”இதுகுறித்து ஏன் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை” என காவல்துறையினர் தாயிடம் வினவியுள்ளனர். அதற்கு அமண்டா, “என் கணவர் எப்போதும் ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவர்போல் நடந்துகொள்வார். இதனால் அவர் முன் செல்லவே நான் பயப்படுவேன். இச்சம்பவம் குறித்து கேட்டால் என்னையும் என் குழந்தையையுமே மிரட்டுவார். ‘அப்படிச் செய்யாதீர்கள்; இது முட்டாள்தனம்’ என்று நான் சொன்னால், என்னையும் அடித்து துன்புறுத்துவார். ஒருமுறை இப்படி நான் கேட்டதற்கு என்னை பலமாகத் தாக்கினார்.
அதில் நான் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்குச் சென்றேன். குழந்தைகளை மட்டுமல்ல, 6 ஆண்டுகளுக்கு முன்பு, அவரைச் சந்தித்த நாள்முதலே என்னையும் கொடுமைப்படுத்தி வருகிறார். ஒருகட்டத்தில் என்னால் இதைப் பொறுக்க முடியாமல்தான் போலீஸூக்கு போன் செய்தேன்” எனத் தெரிவித்துள்ளார். விசாரணையின் அடிப்படையில் இருவரும் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அமண்டா நேரடியாக குழந்தையை தாக்கவில்லை என சொல்லப்பட்டாலும், அவரும் சம்பவங்களின்போது மௌனமாக இருந்துள்ளாரென்பதால் அவர் கைது செய்யப்பட்டிருக்கலாமென தெரிகிறது.