நடுவானில் கிழிந்த பாராசூட்! பாறையில் ஒரு மணி நேரம் தொங்கியபடி உயிர்தப்பிய சாகச வீரர்!
மலை உச்சியில் இருந்து குதிக்கும்போது நடுவானில் பாராசூட் கிழிந்ததால், பாறையில் ஒரு மணி நேரம் தொங்கியபடி சாகச வீரர் ஒருவர் உயிர்தப்பியுள்ளார்
ஜானி டி ஜூலியஸ் என்பவர் மல்யுத்த வீரர் மற்றும் பாராசூட் வீரர். சாகசப் பிரியரான இவர் பாராசூட் மூலம் உயரமான கட்டடம், டவர், பாலம் போன்ற பகுதியில் இருந்து அல்லது மலை உச்சியில் இருந்து குத்து சாகசம் மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டவர். அதன்படி 30 பேர் கொண்ட குழுவுடன் சேர்ந்து பாராசூட்டில் இருந்து குதிக்கும் சாகச நிகழ்வை செய்து காட்ட சென்றுள்ளார். மலை உச்சியை அடைந்ததும் அனைவரும் பாராசூட்டை விரித்து பறந்து விட, ஜானி கடைசி ஆளாக குதித்துள்ளார். தான் குதிப்பதை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார்.
ஆனால், மலை உச்சியில் இருந்து குதித்த ஒரு சில வினாடிகளிலேயே ஜானியின் பாராசூட் கிழிந்து விட்டது. இதனால், வானில் பறப்பதற்கு பதிலாக மளமளவென மலை உச்சியில் இருந்து சறுக்கியபடி கீழே போயுள்ளார். சமநிலையை அடைவதற்காக, மலைமீது ஓரிடத்தில் தன்னை நிலை நிறுத்துவதற்காக போராடியுள்ளார். காற்றின் வேகத்தில் சென்ற அவரது பாராசூட் மலையின் மற்றொரு உச்சியில் சென்று சிக்கி கொண்டது. இதனால், ஏறக்குறைய ஒரு மணிநேரம் வரை மலையில் தொங்கியபடி போராடியுள்ளார்.
கடைசியாக கீழே குதித்த இவரை கவனிக்க பின்னால் வேறு ஆட்களும் இல்லை. இவர் பாறையில் தொங்கிக் கொண்டிருப்பதே அவரது குழுவிற்கு தெரியவில்லை. அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இதன்பின்பு, ஜானி போராடி மலை மீது ஏறி மீண்டு வந்துள்ளார். பார்ப்பவர்களை திகிலின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் அதிபயங்கர சாகச நிகழ்வை வீடியோவாக ஜானி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். லட்சக்கணக்கான பார்வைகளை கடந்த நிலையில் அந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.