பாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு.. 31 பேர் பலி.. 169 பேர் படுகாயம்.. 3 மாதங்களில் 2வது சம்பவம்!
பாகிஸ்தானில் இன்று தற்கொலைப் படை நடத்திய தாக்குதலில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். 169 பேர் காயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.
அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத்தில் இன்று தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஷெஹ்சாத் டவுன், ஷியா தர்லாய் பகுதியில் உள்ள கதீஜாதுல் குப்ரா மசூதி-இமாம்பர்காவில் இன்று வெள்ளிக்கிழமையை முன்னிட்டு முஸ்லிம்கள் தொழுகை நடத்தினர். அப்போது நடைபெற்ற குண்டுவெடிப்பில் 31 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 169 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் காவல் துறையினரும் மீட்புக் குழுவினரும் நிவாரணப் பணிகள் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் அவசர மருத்துவ சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுவதால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. பாகிஸ்தானிய ஊடக அறிக்கைகள், ஒரு தற்கொலை படை நபர் மதிய நேரத்தில் ஷியா வழிபாட்டுத் தலத்தின் பிரதான வாயிலில் குண்டுகளை வெடிக்கச் செய்தார் எனத் தெரிவித்துள்ளன.
'தி டைம்ஸ் ஆஃப் இஸ்லாமாபாத்' பத்திரிகை, அந்த நபர், வழிபாட்டுத் தலத்தின் நுழைவாயிலில் இருந்த காவலர்களால் தடுக்கப்பட்டதாகவும், இதனால் மக்கள் கூடியிருந்த அந்த வளாகத்திற்குள் அவர் நுழைவது தடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. முன்னதாக, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர், பலூசிஸ்தான் விடுதலைப் படையினருடன் சமீபத்தில் மோதலில் ஈடுபட்டனர். இதில் பாகிஸ்தானில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நடந்து சில நாட்களுக்குப் பிறகு இந்த தற்கொலைக் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. தவிர, இந்த குண்டுவெடிப்பு 3 மாதங்களுக்குள் தலைநகரில் நடந்த இரண்டாவது பெரிய சம்பவமாகும். கடந்த ஆண்டு நவம்பரில், இஸ்லாமாபாத் நீதிமன்ற வளாகத்தில் நடந்த கார் குண்டுவெடிப்பின்போது குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

