பாகிஸ்தான்: சமூகஊடக பிரபலம் ஆணவக்கொலை - ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட சகோதரன் திடீர் விடுதலை
உலகம் முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கிய மிகவும் மோசமான "ஆணவக் கொலையாக " கருதப்படும் பாகிஸ்தானிய சமூக ஊடக பிரபலமான கந்தீல் பலூச்சை கொன்ற வழக்கில் அவரது சகோதரர் முகமது வசீக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் நேற்று திடீரென விடுவிக்கப்பட்டதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
ஆணாதிக்க கொள்கைகளை கடுமையாக விமர்சிக்கும் தனது சமூக ஊடக பதிவுகள் மூலமாக பிரபலமான பாகிஸ்தானின் 26 வயதான கந்தீல் பலூச் என்ற பெண், 2016-ஆம் ஆண்டில் அவரது சகோதரரால் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டார். தனது சகோதரியின் நடத்தை "சகிக்க முடியாதது" என்பதால் இந்த ஆணவக் கொலை குறித்து தனக்கு வருத்தம் இல்லை என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்த கொலை தொடர்பாக கந்தீல் பலூச்சின் சகோதரர் முகமது வசீம் கைது செய்யப்பட்டு பின்னர் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த சூழலில் பாகிஸ்தானின் முல்தானில் உள்ள நீதிமன்றத்தால் அவர் முழுவதுமாக விடுவிக்கப்பட்டுள்ளார் என்று அவரது வழக்கறிஞர் சர்தார் மெஹ்பூப் கூறினார். அவரின் விடுதலை தொடர்பான நீதிமன்ற உத்தரவு இன்னும் வெளியிடப்படவில்லை.
குடும்பத்தின் நற்பெயருக்கு அவமானத்தை ஏற்படுத்துவதாக உறவினர்களால் பெண்களை கொலை செய்யும் இத்தகைய "ஆணவக் கொலை" வழக்கு சமீபத்திய ஆண்டுகளில், உலகம் முழுக்கவும் பரபரப்பாக பேசப்பட்டது.
கந்தீல் பலூச்சின் வழக்கில், அவரது பெற்றோர்கள் தங்கள் மகனுக்கு மன்னிப்பு வழங்க மாட்டோம் என்று ஆரம்பத்தில் வலியுறுத்தினர். ஆனால் பின்னர் அவர்கள் மனம் மாறி அவரை மன்னிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் கந்தீல் பலூச்சின் சகோதரரை மன்னிக்க அவரின் தாய் சம்மத கடிதம் அளித்ததாக அவரது வழக்கறிஞர் சப்தர் ஷா தெரிவித்தார். இந்த வார இறுதியில் அவர் விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

