பாகிஸ்தானில் ஆட்சியை தக்க வைப்பாரா இம்ரான் கான்? - கடைசி நேர முயற்சிகள் தீவிரம்

பாகிஸ்தானில் ஆட்சியை தக்க வைப்பாரா இம்ரான் கான்? - கடைசி நேர முயற்சிகள் தீவிரம்
பாகிஸ்தானில் ஆட்சியை தக்க வைப்பாரா இம்ரான் கான்? - கடைசி நேர முயற்சிகள் தீவிரம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் தங்கள் பிடியை இறுக்கி வரும் நிலையில் அதிலிருந்து இம்ரான் கான் எப்படி தப்பிப்பார் என்று கேள்வி எழுந்துள்ளது

பாகிஸ்தானில் கடும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளால் இம்ரான் கான் அரசு கடும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. நாட்டை சரியாக வழிநடத்தாத இம்ரான் கான் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. மேலும் இம்ரான் கான் தலைமையிலான கூட்டணி அரசிற்கு எதிராக வரும் 28ஆம் தேதி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளன.

அப்போது, இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாஃப் கட்சியில் உள்ள 24 எம்பிக்கள் அரசுக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர். இதனால் இம்ரான் கான் அரசு நீடிப்பது கேள்விக்குறியாகியுள்ளது. 24 பேரையும் எதிர்க்கட்சி விலைக்கு வாங்கி விட்டதாக இம்ரான் கானின் கட்சி குற்றஞ்சாட்டி வருகிறது. எனினும் அரசை காப்பாற்ற கடைசி நேர முயற்சிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.

ஆளும் கூட்டணியில் இருந்து இம்ரான் கானை மட்டும் நீக்கி விட்டு அரசை தொடரலாம் என அவரது அமைச்சரவையில் உள்ள 2 கூட்டணி கட்சிகள் யோசனை தெரிவித்துள்ளன. ஆனால் இதற்கு ஆளும் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த 24 பேரையும் தகுதி நீக்கம் செய்வது அல்லது உச்ச நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட யோசனைகளையும் ஆளுங்கட்சி பரிசீலித்து வருகிறது.

ஆட்சியை காப்பாற்றும் முயற்சிகள் பலன் தராவிட்டால் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக நாடாளுமன்றத்தின் முன் லட்சக்கணக்கானோரை திரட்டி பெரும் பேரணி நடத்தவும் இம்ரான் கான் திட்டமிட்டுள்ளார். ஆனால் இம்ரான் கானின் இத்திட்டத்தை முறியடிக்கும் விதமாக 2 நாட்களுக்கு முன்னரே தங்கள் ஆதரவாளர்களை திரட்டி வந்து நாடாளுமன்றம் முன் குவிக்க எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்துள்ளன.

ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள மேலும் ஒரு முயற்சியாக ராணுவத்தின் உதவியை இம்ரான் கான் கோரினார். ஆனால் இதில் தாங்கள் நடுநிலை வகிக்கப்போவதாக ராணுவம் தெளிவாக கூறிவிட்டது. இதனால் கோபமடைந்த இம்ரான் கான் "மனிதர்களாக இருந்தால் ஏதேனும் ஒரு முடிவை எடுப்பார்கள். ஆனால் விலங்குகள் நடுநிலை மட்டுமே வகிக்கும்" என ராணுவத்தை மறைமுகமாக சாடினார்.

ஆனால் இதற்கு ராணுவம் அமைதியையே பதிலாக தந்தது. 2018ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற இம்ரான் கானின் ஆட்சிக்காலம் அடுத்தாண்டுடன் நிறைவடைகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை பல முறை இக்கட்டான நிலையிலிருந்து மீட்டு வெற்றிபெற வைத்துள்ளார் இம்ரான் கான். ஆனால் தற்போது அரசியல் எனும் கிரிக்கெட்டிலும் எதிரணி விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்சியை தக்கவைப்பதற்காக மாயாஜால பந்தை கைவசம் வைத்துள்ளாரா இம்ரான் கான் என்ற கேள்வி எழுந்துள்ளது

- சேஷகிரி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com