பாக். ராணுவத்தை விமர்சித்த பாகிஸ்தான் பத்திரிகையாளர் படுகொலை
பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஐஎஸ்ஐ ஆகியவற்றை விமர்சித்து வந்த பாகிஸ்தான் இளைஞர் கொல்லப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானைச் சேர்ந்தவர் முகமது பிலால் கான் (22). இவர் ஒரு வலைப்பதிவர் மற்றும் பத்திரிகையாளார் ஆவார். இவர் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஐஎஸ்ஐ உள்ளிட்டவை குறித்து விமர்சித்து கருத்துகளை பதிவு செய்துவந்தார். இதனையடுத்து இவர் மீது தாக்குதல் நடத்தப்படும் அபாயம் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று இரவு இவர் மர்மான முறையில் கொலை செய்யப்பட்டார்.
நேற்று இரவு பிலால் கான் தனது நண்பருடன் வெளியே சென்றிருந்தபோது அவருக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்தத் தொலைப்பேசியில் பேசிய நபர் கூறிய இடத்திற்கு பிலால் சென்றுள்ளார். அங்கு அவரை அந்த நபர் காட்டிற்குள் அழைத்து சென்று கொலை செய்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பிலால் கானின் தந்தை அப்துல்லா, “என்னுடைய மகனின் உடலில் கூர்மையான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதற்கான தடயங்கள் உள்ளன. என் மகன் செய்த ஒரே தவறு மதத்தைப் பற்றி பேசியதுதான்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து எஸ்பி சடார் மாலிக், “பிலால் கான் ஒரு கூர்மையான ஆயுதம் கொண்டு கொல்லப்பட்டுள்ளார். அத்துடன் அந்தப் பகுதியிலிருந்த மக்கள் துப்பாக்கிச்சூடு சத்தத்தை கேட்டதாக தெரிவித்துள்ளனர்” எனக் கூறியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அத்துடன் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழும் இந்தக் கொலை பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.