சாமானியர்களின் வங்கியில் கோடிக் கணக்கில் டெபாசிட்.. பாகிஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்..!
பாகிஸ்தானில் இறந்துபோன ஒருவரின் பெயரில் போலி வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு அதில் ரூபாய் 460 கோடி பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சமீப காலங்களாகவே பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புக்கு நேரும் சில சம்பவங்கள் அவர்களையே குழப்பி வருகின்றன. காரணம் வங்கிக் கணக்கில் நடைபெறும் சில பணப்பரிவர்தனை சம்பவங்கள் அவர்களை அதிக சந்தேகத்திற்கு உள்ளாக்குகின்றன. பாகிஸ்தானை சேர்ந்த ஆட்டோ ரிக்ஷா டிரைவர் முகமது ரஷீத் என்பவரின் வங்கிக்கணக்கில் கடந்த சில நாட்களுக்கு முன் சுமார் 300 கோடி அளவிலான பணப்பரிமாற்றம் நடைபெற்றது. இதனை பார்த்த வங்கி அதிகாரிகளே ஷாக் ஆகினர். இதனையறிந்த புலனாய்வு அமைப்பு விசாரணை தீவிரப்படுத்தியது. அதன் ஒரு பகுதியாக முகமது ரதீஷ்த்திற்கு இதுகுறித்து புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சார்பில் விளக்கம் கேட்டு சம்மனும் அனுப்பப்பட்டது. ஆனால் தன் வங்கிக்கணக்கில் இவ்வளவு பணப்பரிமாற்றம் நடைபெற்றது முகமதுவுக்கே தெரியவில்லை. அவர் அப்பாவி என்பதை புலானய்வு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதேபோல மாணவர் ஒருவரின் வங்கிக் கணக்கில் ரூபாய் 100 கோடியும், காய்கறி வியாபாரி ஒருவரின் வங்கிக்கணக்கில் ரூபாய் 200 கோடியும் பணப் பரிமாற்றம் நடைபெற்றதையும் புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். ஆனால் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் அவர்கள் வங்கியில் நடைபெறும் பணப்பரிமாற்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தெரியவந்தது.
Read Also -> மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் மரணம்
இது தவிரவும் பல ஏழை எளிய சாமானியர்களின் வங்கிக் கணக்கில் கோடிக் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்படுவதும், பின்னர் பணப்பரிமாற்றம் மேற்கொள்ளப்படுவதும் புலனாய்வு அதிகாரிகளுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்ற விசாரணையை அவர்கள் மறைமுகமாக தீவிரப்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக இறந்த ஒருவரின் பெயரில் போலியாக 3 வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு அதில் ரூபாய் 460 கோடி அளவிலான பணப்பரிமாற்றம் நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது. புலனாய்வு அமைப்பினர் விசாரணை மேற்கொண்டதில் சில அரசியல்வாதிகள், செல்வாக்கு மிக்க வர்த்தகர்கள் பணமோசடி செய்ய ஏழை எளிய மக்களின் வங்கிக் கணக்கை அவர்களுக்கே தெரியாமல் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் பணமோசடி தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்த கூட்டு புலனாய்வு பிரிவை உண்டாக்கியது. இந்நிலையில் பணமோசடியில் ஈடுபவர்கள் அதிலிருந்து தப்பிக்க ஏழை மக்களின் வங்கிக் கணக்கை அவர்களுக்கே தெரியாமல் பயன்படுத்துவது அம்பலமாகியுள்ளது.