பாக். அரசுக்கு எதிராக பயங்கரவாத இயக்கங்கள் போராட்டம்
பாகிஸ்தான் அரசிடமிருந்து பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய சில இயக்கங்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதி நிறுத்தப்பட்டதற்கு எதிராக லாகூரில் போராட்டங்கள் கிளம்பியுள்ளன.
கோடிக்கணக்கான ரூபாய் நிதியைப் பெற்றுக் கொண்டு பாகிஸ்தான் பொய் கூறி வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதன் எதிரொலியாக ஹபீஸ் சையத்தின் ஜமாத் உத் தவா இயக்கம் உள்பட 2 அமைப்புகளுக்கு நன்கொடை வழங்க பாகிஸ்தான் அரசு தடை வித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஜமாத் உத் தவா இயக்கத்தின் துணைத் தலைவர் அப்துர் ரஹீம் மக்கி, அமெரிக்காவின் கருத்தால் தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பாகிஸ்தானுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்த நினைக்கும் தங்களின் கொள்கைக்கு எதிராக அமெரிக்கா செயல்பட்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். தங்களுக்கு வரவேண்டிய பணவுதவியை பாகிஸ்தான் அரசு நிறுத்தியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது என்றும், தங்களுக்கு நியாயம் கிடைக்க அரசுக்கு எதிராக நீதிமன்றத்தை நாட இருப்பதாக ஃபால்ஹா-இ-இன்சனியத் அமைப்பின் தலைவர் ஹபீஸ் அப்துர் ராஃப் தெரிவித்துள்ளார். இந்தப் போராட்டத்தின் போது அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் துரோகிகள் என்ற பதாகைகளை போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.