வடகொரியாவுக்கு அணு ஆயுதத் தொழில்நுட்பங்களை வழங்கியது பாகிஸ்தான் நாடுதான் என்ற இந்தியாவின் மறைமுகமான குற்றச்சாட்டுக்குப் வலுவான பின்னணிக் காரணங்கள் இருக்கின்றன.
ஒரு பயங்கர வெடிப்பு பல லட்சம் பேரைக் கொல்வதுடன் பின்வரும் சந்ததிகளையும் ஊனமாகச் செய்யும். இப்படியொரு கொடுமையைச் நிகழ்த்தும் ஆயுதத்தை வைத்திருப்பவர்கள்தான் தற்கால உலகின் வல்லரசுகள். வல்லரசு தகுதியை அடைவதற்கு பணக்கார நாடுகள் மட்டுமின்றி பல மக்களைப் பட்டினியில் தவிக்கவிடும் ஏழை நாடுகளும் முயன்று வருகின்றன.
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் மேற்கத்திய நாடுகளால் அடக்க முடியாத நாடாக விளங்கிய லிபியா தனது வலிமையை பல மடங்கு அதிகரித்திருந்தது. அந்த வலிமையின் ரகசியம் அணு ஆயுதம். பெரிதாக எந்தவிதமான ஆராய்ச்சியும் மேற்கொள்ளாத அந்த நாடு அணு ஆயுதங்களை வைத்திருப்பதை அமெரிக்காவின் உளவுத்துறை கண்டுபிடித்தது.
அவற்றை ஆய்வு செய்து பார்த்தவர்களுக்குப் பேரதிர்ச்சி. பெரும்பாலான பொருள்கள் பாகிஸ்தானிடம் இருந்து பெறப்பட்டிருந்தன. அணு ஆயுத நாடான பாகிஸ்தான் தன்னிடம் இருந்த பொருள்களை மறைமுகமாகப் பிற நாடுகளுக்கு விற்றுச் சம்பாதித்ததா? என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், பாகிஸ்தான் அரசு அதைத் திட்டவட்டமாக மறுத்தது. லிபிய அதிகாரிகளிடம் விசாரித்தபோது, அவர்கள் கூறிய பெயர் அப்துல் காதிர் கான். சுருக்கமாக ஏ.க்யூ.கான். பாகிஸ்தானின் அணு ஆயுதத் தந்தை. ஒரு காலத்தில் அப்துல் கலாமுக்கு நிகராகப் போற்றப்பட்டவர்.
கான் மீதான சந்தேகம் வலுப்பெற்றதும் லிபியாவில் களத்தில் இறங்கி ஆய்வுகளை நடத்திய அமெரிக்காவுக்கு பாகிஸ்தானின் அணு ஆயுதக்கள்ளச் சந்தை பற்றிய விவரங்கள் ஒவ்வொன்றாகத் தெரியவர அதிர்ச்சி மேல் அதிர்ச்சி ஏற்பட்டது. அந்த நேரத்தில் கான் பாகிஸ்தானின் அறிவியல் ஆலோசகராக இருந்தார். சர்வதேச ஊடகங்களின் கவனத்தைப் பெற்றதும் கானை பதவியில் இருந்து நீக்கினார் அப்போதைய அதிபர் முஷாரப். சில நாள்களில் அரசு தொலைக்காட்சியில் தோன்றிய கான், தமது குற்றத்தை ஒப்புக் கொண்டார். வடகொரியாவுக்கு அணு ஆயுதத் தொழில்நுட்பங்களை விற்றதாகவும் கூறினார். ஈரான், சவுதி அரேபியா போன்ற நாடுகளிலும் பாகிஸ்தானின் அணு ஆயுதத் தொழில்நுட்பங்களே இருக்கலாம் என்றும் வலுவாக நம்பப்படுகிறது.
பாகிஸ்தான் அணு ஆயுதத்தை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்த கான், 1970-களில் நெதர்லாந்து நாட்டின் உரென்கோ என்ற தனியார் அணு சக்தி நிறுவனத்தில் பணியாற்றியவர். இந்தியாவுடனான போரில் மிக மோசமாகத் தோல்வி கண்டிருந்த பாகிஸ்தான் அந்த நேரத்தில்தான் அணு ஆயுதம் தொடர்பான திட்டங்களைத் தொடங்கியிருந்தது. ஏ.க்யூ.கானின் வருகையால் பாகிஸ்தானுக்குப் புத்துயிர் கிடைத்தது. ஆனால், ஏற்கெனவே பாகிஸ்தானில் இருந்த விஞ்ஞானிகளுக்கு ஏ.க்யூ.கான் பாகிஸ்தானுக்கு வருவது பிடிக்கவில்லை. இந்தப் பகைமை 1998-ம் ஆண்டு மே 28-ம் தேதி முதல் சாங்காய்-1 என்ற பெயரில் முதல் அணு ஆயுதச் சோதனையை நடத்தும் வரையிலும் நீடித்தது. விஞ்ஞானிகளுக்கு இடையே இருந்த பிளவைப் போக்குவதற்காக இரு நாள்கள் கழித்து சாங்காய் - 2 என்ற இரண்டாவது சோதனையையும் பாகிஸ்தான் நடத்தியது. உண்மையில் இவ்விரு சோதனைகளையும் பாகிஸ்தானின் வெவ்வேறு அமைப்புகளே நடத்தின.
முதல் சோதனையை ஏ.க்யூ. கானின் ‘கான்’ சோதனை மையமும் இரண்டாவது சோதனையை பாகிஸ்தானின் அணுசக்திக் கழகமும் நடத்தின. அப்போது ஏற்பட்ட உரசல் காரணமாகவே கான் தன்னிடம் இருந்த ரகசியங்களை லிபியா, வடகொரியா ஆகிய நாடுகளுக்கு விற்றதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதை கான் மட்டும் தனியாகச் செய்தார் என்பதை உலக நாடுகள் ஏற்கவில்லை. பாகிஸ்தான் அரசுக்கு தொடர்பு இருக்கலாம் என்பதுதான் இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளின் வாதம்.
மிகப்பெரிய குற்றச்சாட்டுக்குப் பிறகு, அரசால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட கான், தற்போது சுதந்திரமாகவே பாகிஸ்தானில் வாழ்ந்து வருகிறார். அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அவரைக் கண்காணித்துக் கொண்டே இருக்கின்றன.