மின்சாரத்தை சேமிக்க இவ்வளவு கட்டுப்பாடுகளா!! பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தான்!

மின்சாரத்தை சேமிக்க இவ்வளவு கட்டுப்பாடுகளா!! பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தான்!
மின்சாரத்தை சேமிக்க இவ்வளவு கட்டுப்பாடுகளா!! பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தான்!

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

பொருளாதார நெருக்கடியைச் சந்தித்த இலங்கையைப் போன்றே, இன்னொரு அண்டை நாடான பாகிஸ்தானும் அதை சிக்கலை எதிர்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் போராட்டம் வெடித்து தற்போது புதிய ஆட்சி மலர்ந்துள்ளது. எனினும், அதிலிருந்து இலங்கை இன்னும் முழுவதுமாக மீளமுடியவில்லை. தற்போது இதே பிரச்சினையை பாகிஸ்தானும் எதிர்கொண்டுள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி, கலைக்கப்பட்ட இம்ராம் கான் ஆட்சிக்குப் பிறகு, பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷாபாஸ் ஷெரீஃப் தேர்வானார். அவர் பதவியேற்று ஒரு வருடம் ஆவதற்குள்ளேயே, அந்நாடு பொருளாதார சரிவைச் சந்திக்கத் தொடங்கிவிட்டது.

பொருளாதார நெருக்கடி!

அதிகரித்து வரும் கடன், பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதி செலவுகள், குறைந்து வரும் அந்நியச் செலாவணி கையிருப்பு, உலகளாவிய பணவீக்கம், அரசியல் நிச்சயமற்ற தன்மை, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் தொடர்ச்சியான வீழ்ச்சி ஆகியவற்றை சமாளிக்க முடியாததால் பாகிஸ்தானின் பொருளாதாரம் சரிவைச் சந்தித்து வருகிறது. நாடு முழுவதும் மின்சாரம் மற்றும் சமையல் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, பாகிஸ்தானின் எரிசக்தி துறையின் கடன் சுமை தாங்கமுடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ரூ.2.50 லட்சம் கோடிக்கு உயர்ந்துள்ளது. இதனால் ஷாப்பிங் மால்கள், உணவகங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் சந்தைகளை முன்கூட்டியே மூடுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மின்சாரத்தை சேமிக்க இவ்வளவு கட்டுப்பாடுகளா!!

அதன்படி சந்தைகளை இரவு 8.30 மணிக்குள்ளும், திருமண மண்டபங்களை இரவு 10 மணிக்குள்ளும் மூட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் 60 பில்லியன் தொகையை மிச்சப்படுத்த முடியும் என பாகிஸ்தான் நம்புகிறது. இது மட்டுமல்லாமல் நாட்டில் உள்ள அனைத்து அரசு துறைகளும் மின்சார பயன்பாட்டை 30 சதவீதம் குறைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பாகிஸ்தானில் பெய்த பெருவெள்ளமும் உள்நாட்டு உற்பத்தியை முற்றிலும் முடக்கியுள்ளது. வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவால் பொருளாதார வளர்ச்சியானது பட்ஜெட்டில் குறிப்பிட்ட இலக்கை விட குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அவ்வெள்ளத்தால், பாகிஸ்தானில் கிட்டத்தட்ட 4 கோடி மக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும், வேலையில்லா திண்டாட்டமும் அதிகரித்துள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம்கூட வழங்க முடியாத அளவுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு 240 ஆக சரிந்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் அந்நிய செலாவாணி கையிருப்பு வேகமாக குறைத்து வரும் நிலையில், மூன்று வாரங்கள் மட்டுமே இறக்குமதி செய்ய முடியும் என்று பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால், காய்கறிகள், உணவுப் பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை பாகிஸ்தானில் கடுமையாக அதிகரித்துள்ளது. குறிப்பாக 1 கிலோ வெங்காயம் ரூ.240க்கு விற்கப்படுகிறது. காய்கறிகள், இறைச்சி, பால் பொருட்கள் மற்றும் ரொட்டி ஆகியவற்றின் விலையும் விண்ணைத் தொட்டுள்ளன.

கோதுமை மாவு விலை உயர்வு!

பாகிஸ்தான் மக்களின் முக்கிய உணவான கோதுமை மாவின் விலையும் உயர்ந்துள்ளது. கராச்சியில், 1 கிலோ மாவு கோதுமை மாவு ரூ.140லிருந்து ரூ.160 வரை விற்கப்படுகிறது. இதனிடையே இஸ்லாமாபாத் மற்றும் பெஷாவரில் 10 கிலோ மாவு மூட்டை ரூ.1500க்கும், 20 கிலோ மூட்டை ரூ.2800க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கோதுமையின் தட்டுப்பாட்டாலும் அந்நாடு நெருக்கடியைச் சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார நிபுணர்கள் கவலை

’விலைவாசி உயர்வை தோற்கடிப்போம்’ என்ற கோஷத்துடன், ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசால் சாமானிய மக்களுக்கு ஓரளவுகூட நிவாரணம் வழங்க முடியவில்லை என பொருளாதார் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்றும் அவர்கள் நம்புகிறார்கள். பொருளாதார நெருக்கடி, அரசாங்கத்தை மேலும் பலவீனப்படுத்துகிறது என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பாகிஸ்தானைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் உசைர் யூனுஸ், “பாகிஸ்தானில் தற்போது நிலைமை மோசமாக உள்ளது. மேலும் அந்த நாடு இன்னொரு பணவீக்கத்தை சந்திக்க உள்ளது. பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பு தீர்ந்துவிட்டதால், அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. இதனால்தான் பொருளாதாரம் சிதைந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் பதில்!

இதற்கு அந்நாட்டு நிதியமைச்சர் இஷாக் தர், “தற்போது 10 பில்லியன் டாலர் அந்நியச் செலாவணி கையிருப்பு உள்ளது. தவிர, பிற நாட்டுக்குச் செலுத்த வேண்டிய கடனை சரியான நேரத்தில் செலுத்துவோம். பாகிஸ்தானின் அந்நிய செலாவணி கையிருப்பு மீண்டும் வலுப்பெறும். சவுதி அரேபியா உள்ளிட்ட நட்பு நாடுகளின் நிதி விரைவில் பாகிஸ்தானுக்கு வந்து சேரும்” எனப் பதிலளித்துள்ளார்.

இந்த நிலையில், ஜெனிவாவில் நடைபெற்ற அனைத்துலக மாநாட்டில் பேசிய ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைமைச் செயலாளர் அன்ட்டோனியோ குட்டெரெஸ், “வெள்ளப் பேரிடர் சேதங்களிலிருந்து மீண்டுவர பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்ட வேண்டும். வெள்ளச் சேதத்திலிருந்து மீளவும், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும் பாகிஸ்தானுக்கு 16 பில்லியன் டாலருக்கும் அதிகமான பணம் தேவைப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com