”இவ்ளோ பேரா?”|வெறும் ரூ16,500க்கு உரிமை கொண்டாடிய 12 எம்பிக்கள்! பாகிஸ்தானில் அரங்கேறிய கலகல சம்பவம்
நாடாளுமன்றத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்ட ரூ.16,500 தொகையை, அதன் உரிமையாளரிடம் ஒப்படைப்பதற்கு வைக்கப்பட்ட சோதனையில், 12 எம்பிக்கள் போட்டியிட்டது பாகிஸ்தானில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
பணம் என்றால் பிணமும் வாயைப் பிளக்கும் ஒரு பழமொழி சொல்லப்படுவதுண்டு. அதற்கு உதாரணமாக, நம் அண்டை மாநிலமான பாகிஸ்தானிலேயே அரங்கேறி உள்ளது. அதிலும் சிறு சாதாரண தொகைக்கே எம்பிக்கள் சிலர் உரிமை கோரியது பாகிஸ்தான் நாடாளுமன்றத்தையே நகைச்சுவையில் ஆழ்த்தியுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகராக இருப்பவர், அயாஸ் சாதிக். இவர், நாடாளுமன்றத்திற்குள் ரூ.16,500 தொகையைக் கண்டுபிடித்துள்ளார். அதை எடுத்த அவர், உரிய நபரிடம் சேர்க்க ஒரு தேர்வை வைக்க முடிவு செய்துள்ளார்.
இதற்காக, கடந்த டிசம்பர் 8ஆம் தேதி நடைபெற்ற அமர்வின்போது அந்தத் தொகையை எடுத்து நீட்டியபடியே, “இது யாருடைய பணம்? பண உரிமையாளர் கையை உயர்த்தவும்” எனக் கோரியுள்ளார். ஆனால், அதைப் பார்த்ததும், கண்ணிமைக்கும் நேரத்தில் சுமார் 12 எம்பிக்கள் தங்களது கையை உயர்த்தி, பணத்திற்கு உரிமை கோரியுள்ளனர். இதைப் பார்த்ததும், சபாநாயருக்கே தலைசுற்றி போயுள்ளது. எனினும் நிலைமையை உணர்ந்த சபாநாயகர், “பணம் தொடர்பாக 10 குறிப்புகள் உள்ளன. தவிர, இன்னும் 12 உரிமையாளர்கள் உள்ளனர்" என்று அவர் மேலும் கிண்டலாகத் தெரிவித்துள்ளார். இதனால், அமர்வு சற்று நேரம் தடைப்பட்டது. என்றாலும், இறுதியில் அந்தப் பணம் அதன் உரிமையாளரான இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் எம்.பி.யான முகமது இக்பால் அப்ரிடியிடம் ஒப்படைக்கப்பட்டது.
மறுபுறம், இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், விவாதங்களும் பறக்கத் தொடங்கின. பணம் உரிமையில்லாத எம்பிக்கள் கைகளை உயர்த்தியதால், அவர்களின் செயலைக் கண்டித்த இணையவாசிகள் அவர்களை உடனே பதவிநீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். "நமது நாடாளுமன்றம், எவ்வளவு நேர்மையானது என்பதை இந்தச் சூழ்நிலையில் இருந்து அறியலாம்” என்ற பதிவும் வைரலானது. பாகிஸ்தான் எந்த அளவுக்கு நலிவடைந்த பொருளாதாரத்தைச் சந்தித்து வருகிறது என்பதற்கு இந்த வீடியோவே உதாரணம் என்கின்றனர், ஆய்வாளர்கள்.
கடந்த சில வருடங்களாக பாகிஸ்தான், கடுமையான நிதி நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. இதைச் சமாளிக்க உலக நாடுகளிடமும், சர்வதேச நிதியகத்திடமும் அது, கடன் பெற்று வருகிறது. கடந்த 2020 முதல் பொருளாதாரப் பிரச்னைகளை அதிகளவில் சந்தித்துவரும் பாகிஸ்தான், சர்வதேச நாணய நிதியத்தின் ஐந்தாவது பெரிய கடனாளியாக உள்ளது. அது, 1958 முதல் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 20க்கும் மேற்பட்ட கடன்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

