பாகிஸ்தான் பக்கம் வீசும் குவைத் காற்று! என்ன நடக்கிறது வளைகுடாவில்? இந்தியாவுக்கு ஆபத்தா?
செய்தியாளர் : ஐடா அருட்செல்வி
வளைகுடா நாடுகளில் பாகிஸ்தான் தனது ராணுவ செல்வாக்கை மெதுவாக விரிவுபடுத்தி வரும் நிலையில், அப்பிராந்தியத்தில் சத்தமில்லாத சில மாற்றங்கள் உருவாகி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் மற்றும் குவைத் இடையே ஆகஸ்ட் 27ஆம் தேதி பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
“Protocol Agreement-2026” என அழைக்கப்படும் இந்த ஒப்பந்தத்தில், குவைத் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஷேக் அப்துல்லா அலி அப்துல்லா அல்-சலேம் அல்-சபா மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் ஆகியோர் கையெழுத்திட்டனர். இரு நாடுகளின் ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவதுடன், பிராந்திய பாதுகாப்புக்கும் இந்த ஒப்பந்தம் பங்களிக்கும் என குவைத் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், கூட்டு ராணுவப் பயிற்சிகள், ராணுவக் கல்வி, உளவுத் தகவல் பரிமாற்றம், தளவாடங்கள், பாதுகாப்புத் தொழில்நுட்பம், ஆராய்ச்சி, மின்னணு தகவல் தொடர்பு மற்றும் ராணுவ நிபுணத்துவப் பரிமாற்றம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட உள்ளன. குவைத் படையினருக்கு பயிற்சி அளித்தல், எல்லை மேலாண்மை உள்ளிட்ட பாதுகாப்புத் துறைகளிலும் பாகிஸ்தான் உதவ உள்ளது என்பதும் கவனிக்கப்படத்தக்கது.
மேலும், ராணுவ உற்பத்தி மற்றும் பாதுகாப்புத் தொழில்நுட்ப மேம்பாட்டிலும் இரு நாடுகளும் ஒருங்கிசைந்து செயல்பட உள்ளன. வழக்கமான கூட்டு ராணுவப் பயிற்சிகள், இருதரப்பு பயணங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பரிமாற்றங்களும் நடைபெறும். இந்த ஒப்பந்தம் 5 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும். இரு நாடுகளில் ஏதேனும் ஒன்று விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டால், ஒப்பந்தம் தானாகவே புதுப்பிக்கப்படும்.
ஈரானுடன் நீடித்து வரும் மோதல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகள் பாதுகாப்பு மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொண்டு வரும் சூழலில் இந்த ஒப்பந்தம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. எண்ணெய் ஏற்றுமதிக்கு ஹோர்முஸ் நீரிணையை சார்ந்துள்ள குவைத், அணு ஆயுதம் கொண்ட பிராந்திய சக்தியான பாகிஸ்தானுடன் ராணுவ உறவை வலுப்படுத்த விரும்புகிறது.
இந்த ஒப்பந்தம் பாகிஸ்தானுக்கும் குறிப்பிடத்தக்க வெற்றியாக ஒரு தரப்பினரால் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சவுதி அரேபியா மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகளுடன் ராணுவ உறவுகளை விரிவுபடுத்தி வரும் பாகிஸ்தான், தற்போது குவைத்துடனான ஒப்பந்தம் மூலம் வளைகுடாவில் தனது ராணுவத் தடத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
இதற்கிடையே இந்த ஒப்பந்தத்தால் வரும் நாட்களில் இந்தியாவுக்கு ஏதேனும் ஆபத்து இருக்குமா என்ற கேள்வி தலை தூக்கியுள்ள நிலையில் குவைத்-பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தம் உடனடியாக இந்தியாவுக்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என்று கூறப்படுகிறது. ஏனெனில், ஒரு நாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதலை மற்றொரு நாட்டின் மீதான தாக்குதலாகக் கருதும் பரஸ்பர பாதுகாப்பு விதி இதில் இடம்பெறவில்லை.
எனினும், வளைகுடாவில் பாகிஸ்தானின் அதிகரித்து வரும் ராணுவ செல்வாக்கை இந்தியா உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளுடன் இந்தியாவுக்கு வலுவான வர்த்தக மற்றும் பாதுகாப்பு உறவுகள் உள்ளன. இப்பிராந்தியத்தில் இந்தியாவின் இருதரப்பு வர்த்தகம் சுமார் 100 பில்லியன் டாலர் மதிப்புடையது.
மேலும், குவைத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். வளைகுடா நாடுகள் முழுவதும் 85 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் உள்ளனர். எனவே, பாகிஸ்தானின் ராணுவ ஒத்துழைப்பு இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பு அல்லது வளைகுடாவில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்பதை இந்தியா கவனிக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பும் வலுவடைந்துள்ளது.
அதேவேளை, வளைகுடா நாடுகளுடனான இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக உறவுகள் காரணமாக, பாகிஸ்தானின் வளர்ந்து வரும் செல்வாக்கு உடனடியாக இந்தியாவுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பில்லை எனவும் பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

